பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

449


படிக்கவேண்டும். கற்றல் ஒரு தொடர் பணி! நாம் தொடர்ந்து கற்றுக்கொண்டே போனால் நன்றாக வாழலாம். உடலுக்கு வலிவு; ஆன்மாவிற்கு கருத்து!

நல்ல நூல்களைக் கற்றல், சிந்தித்தல், தெளிதல், செயற்படுதல், ஆன்மிக வாழ்க்கைக்குத் துணை செய்யும். ஆன்மிக வாழ்க்கை என்பது ஆன்மாவின் தரத்தை உயர்த்துதல், வளர்த்தல் என்பதாகும். ஆன்மிக வாழ்க்கை மத சம்பந்தமுடையது மட்டுமன்று. கற்றல், கேட்டல், அன்பு செய்தல், ஒப்புரவு அறிந்து ஒழுகுதல் ஆகியன எல்லாம் ஆன்மிக ஒழுக்க நெறிகள்; ஆன்மிகப் பண்புகள்.

இவர் தேவர் என்றும் அவர் தேவர் என்றும், என் மதம் - உன் மதம் என்றும் கலகம் செய்பவர்கள் மதவாதிகள்; மத வெறியர்கள்; இது ஆன்மிகம் ஆகாது. விநாயகரின் வயிறு . பெறு வயிறு, அது உலகத்தின் சின்னம், உலகந்தழீஇய வாழ்க்கைதான் ஆன்மிக வாழ்க்கை. ஒத்தது அறிந்து ஒழுகுதல்தான் ஆன்மிக வாழ்க்கை.

கடவுள், ஆன்மா, நிலம், வான், வாயு, நீர், மானுட உயிர்கள் அனைத்தும் கற்பிப்பது பொதுமை! கடவுள், ஊர், பேர் மதம், இவைகளைக் கடந்து வாழ்வோம்! கடவுள் வழிபாடு என்பது பொதுமை போற்றலேயாம்! ஆற்றல்மிக்க அன்பால், அமைதி வழியில் மானுட சமுதாயத்தை அழைத்துச் செல்லுதலே ஆன்மிக வாழ்க்கை.

கடவுள் வழிபாட்டினால் ஆற்றலைப் பெறுவோம்! நாம் வளர்வோம்! நாடும் வளரும்! எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பதான திசை நோக்கி நடப்போம்! புதியதோர் உலகம் செய்வோம்!