பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

451


இணைப்பென்றும் முனையென்றும் நினைப்பதை விட அம்மையின் இடம் என்று நினைப்பதே நமக்கு வழக்கமாகி விட்டது. ஆதலின் பாரதப் பண்பாட்டை எடுத்து நிறுத்தத் தலைப்படுபவர்கள் இந்நாட்டுச் சமயவாழ்வைச் செப்பஞ் செய்ய வேண்டும். சமயவாழ்வை மீட்டும் வளமாக அமைக்க வேண்டும். அதனைச் செய்யாமல் வேறு துறைகளில் தொண்டு புரிவது உயிரூட்டாமல் உடம்புக்கு அணிசெய்வதேயாகும்.

கடவுளும் அவன் அருளும் என்றும் மாறா இயல்போடு இருந்தாலும், சமய வாழ்வு காலத்துக்குக் காலம் புதிய புதிய நெறியில் இயங்கும். அடிப்படையில் மாறுதல் இராவிட்டாலும் இயங்கும் நெறியில், தொண்டு வகையில் காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்ப வேறுபடும். ஆதலின் இன்று நமக்கு இன்றியமையாமல் உள்ளது சமயவாழ்வு; அவ்வாழ்வில் மறுமலர்ச்சி இன்றியமையாதது.

சமய வாழ்வில் தலைசிறந்து விளங்குவது தமிழ்நாடு. இங்குள்ள திருக்கோயில்கள் இன்றும் வழிபாட்டிடங்களாக, மக்களின் மதிப்புக்குரியனவாக இருப்பதனால் இது விளங்கும். தமிழ் நாட்டு வாழ்வே திருக்கோயிலைச் சூழ்ந்து வளர்ந்தது என்று சொல்லிவிடலாம். அக்கோயில்கள் மாத்திரம் இருந்தால் போதுமா? மனிதனுடைய முயற்சிகள் அனைத்திலும் சமய உணர்ச்சி கலக்க வேண்டும். அப்போது தான் மனிதனுக்கு மனிதன் பகையும் பொறாமையும் கொள்ளாமல் வாழமுடியும்; யாவரும் இறைவனாகிய ஒரு தந்தையின் மக்கள் என்ற உணர்ச்சி தலைப்படும்.

இத்தகைய சமய மறுமலர்ச்சிக்காகத் தொண்டு புரியும் பெரியவர்களில் அருட்பெருந்திரு குன்றக்குடி அடிகளார் ஒரு தனிச் சிறப்பைப் பெற்றிருக்கிறார்கள். குடும்பத்தை நீத்துத் துறவுபூண்ட அவர்கள் தமிழ் நாடு முழுவதையுமே தம்முடைய குடும்பமாக எண்ணிச் சமய வாழ்வில் புதிய