நடந்ததும் நடக்க வேண்டியதும்
35
பில்லை. குன்றக்குடியைப்போல நூற்றுக்கணக்கான கிராமங்களைத் தன்னிறைவுடைய கிராமங்களாக நாடு முழுதும் காணவேண்டும். நாட்டை நலிவுறச் செய்யும் வறுமையை எதிர்த்துப் போராடுவதே இனி நமது வாழ்நாட்பணி! சாதி, மதச் சண்டைகளால் சமூக உறவுகள் பாதிக்கப்பட்டுக் கிராமங்கள் ஒளியிழந்து போகாமல் பாதுகாத்து வளர்ப்பதே நம்பணி! “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்றார் திருமூலர். "எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்றார் மாணிக்கவாசகர். "ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு” என்றார் பட்டினத்தடிகள். இந்த நாட்டில் மதங்களின் பெயரால் பிரிவினைகளைத் தோற்றுவித்துப் பகைமையை வளர்த்துச் சண்டைகளை மூட்டுகிறார்கள்! இந்திய ஒருமைப் பாட்டைச் சிதைக்கின்றனர். பண்பட்ட சமய நெறியை வளர்ப்பதன்மூலம் ஆன்மநேய ஒருமைப்பாட்டை வளர்த்துச் சமயப் பொதுநெறிகண்டு இந்திய ஒருமைப்பாட்டுக்கு அரண் செய்வது ஆகியன நமது கடமைகள்-பணிகள்!
திருக்குறள் ஒரு வாழ்க்கை நூல். திருக்குறளை நாட்டுப் பொது நூலாக்குவதன் மூலம் திருக்குறளை வாழ்க்கை நெறியாக்க வேண்டும். இந்தப் பணிகளோடு நம்முடைய கருத்துக்களுக்கு எழுத்து வடிவம் தரவேண்டும். இப்போதுள்ள பணி நெருக்கடிகளின் காரணமாகப் பத்திரிக்கைப் பணி அடிக்கடி பாதிக்கிறது. பத்திரிகையை முறையாகக்கொண்டு நடத்துதல் வேண்டும். இரண்டாவது சுற்றில் மேடைப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணம்; முற்றுப் புள்ளியாக இல்லாது போனாலும் கட்டாயம் குறைக்கவேண்டும். 1952-இல் நாம் பேசத் தொடங்கிய பொழுது மடத்தின் தலைவர்கள் என்றவகையில் நாம் மட்டுமே! மேடைப் பேச்சுக்கும் இன்று பல திருமடங்களின் போற்றுதலுக்குரிய தலைவர்கள் தமிழ் நாடெங்கும் சென்று சொற்பொழிவாற்றி வருகின்றனர். அதனால் நாம் மேடைக்கு வராமை தமிழ்நாட்டுக்கு ஒருபெரிய இழப்பாகாது.