36
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
ஆனாலும் நம்முடன் வழிநடை போடும் இயக்க நண்பர்கள் அன்பர்கள் இடையில் உறவுகள் வளரவும், கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறவும், கலந்துரையாடல்கள் நடைபெறும். கலந்துரையாடல்கள் அரங்கக் கூட்டமாக நிகழும். நாம் அவர்களிடத்தில் எடுத்து மொழியும் செய்திகளை நாட்டு மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு என்பது நம்முடைய நம்பிக்கை. கல்வி நிறுவனங்களுக்குச் செல்வது தவிர்க்க இயலாதது. இந்தக் கட்டுப்பாடு தென்காசி திருவள்ளுவர் கழகம், மதுரை அரச மரத்தடி விநாயகர் இசை இலக்கியப் பேரவை, மதுரை நேரு ஆலால சுந்தர விநாயகர் திருக்கோயில், தேனி வரசித்தி விநாயகர் திருக்கோயில், கிருஷ்ணகிரி விஞ்ஞான ஆசிரியர்கள் கழகம் என்பன போன்ற அமைப்புகளுக்குக் கட்டாயம் விதிவிலக்கு உண்டு. இனி தொடர்ந்து “ஆழமாக கிராமச் சமுதாய மேம்பாட்டுப் பணிகளைச் செய்வது, எழுதுவது என்பதுதான் நம்முடைய தலையாய கடமை” என்று உறுதி எடுத்திருக்கிறோம். அதோடு தமிழ்நாட்டு மக்கள் சமய ஞானமும், தெளிவும் பெறத்தக்க வகையில் எழுதுதல், துண்டுப் பிரசுரங்கள் வெளியிடுதல் ஆகிய பணிகளை மேற்கொள்வதோடு திருத்தொண்டர், நாயன்மார் அடிச்சுவட்டில் என்று நாம் தொடங்கிய செயற்பாட்டு வழிபாட்டு முறையினை மேலும் ஆழம்படச் செய்வது என்பதும் மற்றவர்களையும் செய்யத்துரண்டுவது என்பதும் நமது தலையாய நோக்கம். இனி எதிர்வரும் இரண்டாவது சுற்றில் இங்ஙணம் நம்முடைய பணிகள் நடைபெறத் திருவருள் துணை செய்யும் என்று நம்புகின்றோம். நம்மைச் சார்ந்த நண்பர்களும், அன்பர்களும் தொடர்ந்து நம்முடைய பயணத்தில் வருவார்கள். இந்த மாற்றங்கள் அவர்களையும், சமுதாயத்தையும் வளர்க்கும் என்று நம்புகின்றோம்.
"புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்”