பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

468

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்


கழகத்தில், 1974-75ஆம் ஆண்டுக்குரிய சொர்ணம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவுத் திட்டத்தின் கீழ் 'நமது நிலையில் சமயம்-சமுதாயம் என்னும் தலைப்பில் சமயம் சமுதாயம், "சமய மறுமலர்ச்சி", 'சமய சமுதாய மறை' என்னும் முப்பெருந் தலைப்புகளின் கீழ் மூன்று நாட்களாக நிகழ்த்திய பேருரையைத் தொகுத்துப் பல்கலைக் கழகம் வெளியிட்டிருக் கிறது.

'நமது சமுதாயத்தில் சமய நிறுவனங்கள் ஆடம்பரமான வாழ்க்கை முறை-படாடோபமான திருவிழாக்கள் நடத்துகின்றன. அதுபோழ்து, நமது சமுதாயத்தை சேர்ந்த பல கோடி மக்கள் ஊமையராய்ச்-செவிடர்களாய்ப் பாழ்பட்டுப் புழுதியில் கிடப்பதைச் சமயத் தலைவர்கள் உணரத் தவறுகின்றனர். மக்களைத் தழுவி வளர்க்காத சமய நிறுவனங்கள் எதற்காக நடமாடும் கோயில்களை நாடிப் போற்றாத நிறுவனங்கள் எதற்காக? என்ற வினாக்களை வரலாறு எழுப்பத்தான் செய்யும். இனி, வரலாறு எழுப்ப இருக்கும் வினாக்கள் சொற்களாகத் தோன்றா, அருளியல் வழிப்பட்ட புரட்சியாகத்தான் தோன்றும். அது சீரமைப்பைச் செய்தே தீரும்' (பக். 68) என்று அவர் சமய நிறுவனங்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை குறிப்பிடத்தக்கது. நூல் முழுவதும் இத்தகைய பல்வேறு புரட்சிகரமான சிந்தனைகளைக் காண்கிறோம்.

மொத்தத்தில், மனித இனத்துக்குச் சமயம் பெரிதும் பயன்படவேண்டும் என்னும் அருங்கருத்தை அழுத்தந் திருத்தமாக- ஆணித் தரமாக-வலியுறுத்தி யிருக்கும் அடிகளாரின் இந்தச் சொற்பொழிவு நூல்-அனைவரும் படித்தறிந்து கொள்ள வேண்டிய கருத்துப் பெட்டகம்; சிந்தனைக் களஞ்சியம்.

மு. கருணாநிதி