பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

469



அணிந்துரை
(நமது நிலையில் சமயம் - சமுதாயம்)

சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பேராசிரியராய் இருந்து, இருபத்தைந்து ஆண்டுகள் சிறந்த தமிழ்ப் பணியாற்றிய சொல்லின் செல்வர் டாக்டர் சேதுப்பிள்ளை அவர்கள் தமது அன்னையார் திருமதி சொர்ணம்மாள் பெயரால் நிறுவிய அறக்கட்டளைச் சொற்பொழிவினை இந்த ஆண்டுத் தொடக்கத்தில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் நிகழ்த்தினார்கள். சமயத் தொண்டராகவும், தமிழ்த் தொண்டராகவும் ஒருசேர விளங்கும் அவர்கள் "நமது நிலையில் சமயமும் சமுதாயமும்” என்ற தலைப்பினைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, மூன்று நாட்கள் முறையே, சமயம் சமுதாயம்', 'சமய மறுமலர்ச்சி', "சமய சமுதாய மறை" என்ற உட்தலைப்புகளில் சொற்பொழிவுகளைத் திறம்பட நிகழ்த்தினார்கள். சமய உலகில் இருந்து கொண்டு சமுதாய நோக்கு நோக்குவதில் அடிகளார் தனித்திறம் வாய்ந்தவர். தந்தை பெரியார் அவர்களுடன் தனிப்பெரும் நட்புப் பூண்டு இவர் இருந்த நிலையே இதற்கு நல்ல விளக்கம் தரும். மாடதிபதியாக இருந்தாலும், மகேசுவரனைப் பற்றி எண்ணினாலும் இவருடைய சிந்தனைகள் மக்கட் சமுதாயத்தைச் சுற்றியே சுழல்வதனைக் காணலாம். இம்முறையில் இவர் ஒரு புதுமைத் துறவியாகப் - புரட்சித் துறவியாகக் காட்சியளிக்கின்றார்.

மனிதன் விலங்குத் தன்மையிலிருந்து விலகி மனிதத் தன்மையைப் பெற்று இறைநிலையை எய்தவும், இயல்பாய் குறையினின்று நீங்கி, நிறை நலம் பெறச் சமயம் துணை செய்கிறது என்றும், பல்வேறு சமய நெறிகளைக் கடந்த பொதுமை நெறியே மனித உலகத்தை ஈடேற்றுவதற்குத் தகுந்த நெறி, அந்நெறியே தமிழர் சமய நெறி என்றும் கடவுள்.