பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

470

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்


தன்மையெனப் பாராட்டப் பெறும் அன்பு, அருள், ஒப்புரவுக் கொள்கை நாட்டில் தழைக்கும்படி கடவுள் நம்பிக்கை உடையோர் வாழ்ந்து காட்ட வேண்டும் என்றும் சின்னங் களும், சடங்குகளும் மட்டுமே கடவுள் நெறிகள் ஆகா என்றும், மழைபொழிந்ததின் விளைவை மண் காட்டுவதைப் போல், சமயநெறி நின்று வாழ்வோரின் இயல்பினை வையகம் காட்ட வேண்டும் என்றும், விளைவுகள் காட்ட வேண்டும் என்றும், தமிழ்ச் சமயத்தில் தீண்டாமை இல்லையென்றும் "ஒன்றே குலம்" என்றும் திருமூலர் ஆணையின்படி ஒரு குலம் அமைக்க வேண்டுமென்றும், மனித உள்ளங்கள் அருள் நெறிவழி இணைக்கப் பெறும்பொழுது மண்ணகம் விண்ணகம் ஆகும் என்றும், தவத்திரு அடிகளார் . அவர்கள் தமது முதல் நாள் சொற்பொழிவில் எடுத்துக் காட்டியிருப்பது உணர்ந்து போற்றத்தக்கதாகும்.

"சமய மறுமலர்ச்சி” என்ற தலைப்பில் அருளுடைய அடிகளார் அவர்கள் நிகழ்த்தியிருக்கும் இரண்டாம் நாள் சொற்பொழிவு, புரட்சிக் கருத்துகள் பல பூத்துக் குலுங்குவதாகும். சான்றாக, பழங்காலத் திருக்கோயில்களில் எல்லோரும் சென்று வழிபாடு செய்துகொள்ளும் உரிமை இருந்தது என்றும், ஒரு சிலர் ஆதாயம் கருதி இடையில் அந்த உரிமைகளைப் பறித்திருக்கிறார்கள் என்றும், திருக்கோயில் கருவறைக்குச் சென்று புனலும் பூவுமிட்டு வழிபடும் உரிமையைக் கண்ணப்பர் பெயரால் அடைந்தே தீர வேண்டும் என்றும், வழிபாட்டுக்குரிய மொழி தமிழே என்றும், இறைவனைத் தமிழால் பாடித் துதி செய்தல்-நூறு கோடி அர்ச்சனைக்கு ஒப்பானது என்றும், தமிழ் வழிபாட்டு இயக்கம் மொழி இயக்கமன்று, அதன் நோக்கம் பக்தியை வளர்ப்பதே ஆகுமென்றும், பழங்காலத் திருக்கோயில்கள் சமுதாயத்தைக் கண்ணின் இமைபோல் பாதுகாக்கும் நிறுவனங்களாக நிலவின என்றும், ஒவ்வொரு திருக்கோயில்