பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

471


களும் குடிகளைத் தழுவியதாக விளங்கவேண்டும் என்றும் தவத்திரு குன்றக்குடி அடிகளார். அவர்கள் கூறியிருக்கும் கருத்துகள் அனைவரும் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கனவாகும்.

மூன்றாம் நாள் சொற்பொழிவு "சமய சமுதாய மறை” என்ற தலைப்பில் அமைந்துள்ளது. திருக்குறளே சமய மறை நூல் என்றும் மறை நூலுக்குரிய இயல்புகளனைத்தும் திருக்குறளுக்குப் பொருந்தியிருக்கின்றனவென்றும், வாழ்வியல் நூலாகவும் திருக்குறள் அமைந்து மக்கள் வாழ்க்கையை வழி நடத்திச் செல்ல வழி செய்கிறது என்றும் அடிகளார் அவர்கள் எடுத்துக்காட்டுகின்றார். தனி மனிதன், சமய மனிதனாக, சமுதாய மனிதனாக, உலக மனிதனாக, ஒரு முழு மனிதனாக முழு வளர்ச்சியும், மலர்ச்சியும் பெறுவதற்குத் திருக்குறளே பெருந்துணை செய்யவல்லது என்றும் கன்பூஸியஸ், சாக்ரடீஸ், மார்க்ஸ், லெனின், வால்டர், ரூஸோ முதலிய உலகச் சிந்தனையாளர்கள் கருத்துகளோடு ஒப்பிட்டு நோக்கி வள்ளுவத்தின் மாண்பினை வகையுற எடுத்து மொழிகின்றார்.

சமயத்திலிருப்பவர்கள் சமுதாயத்தை மறந்து விடுகிறார்கள், சமுதாயப் புரட்சிவாதிகள் சமயத்தைக் கண் கொண்டு பார்க்கவும் விரும்புவதில்லை என்று பொதுவாக ஒரு குறை கூறப்படுவதுண்டு. ஆனால் நம் மதிப்பிற்குரிய திரு வண்ணாமலை குன்றக்குடி ஆதினத் தலைவராக விளங்கும் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் அருந்தமிழ் கற்ற அறிஞர். சைவமும் தமிழும் தழைத்தினிதோங்க வேண்டும் என்ற பழமொழியோடு, சமயமும் சமுதாயமும் தழைத்தினி தோங்கவேண்டும் என்ற புதுமொழியைப் படைத்து, மேன்மைகொள் சமய நீதி விளங்குக உலகமெல்லாம் என்று பாடுபட்டு வரும் அடிகளார் தமிழ்ப் பண்பாட்டுத்துறவியார் ஆவர். சமயத் தொண்டையும், சமுதாயத் தொண்டையும் தம் இரு கண்களாகப் போற்றி வளர்த்து வரும் அடிகளார் அவர்கள் ஆற்றிய அருமையான சொற்பொழிவுகளை நேரில்