பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

478

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்


எளிமையாய்க் கிடைப்பதே இந்நூலால் நாம் பெறும் பயன் எனலாம். இந்நூலில் நாம் விரும்பி நுழைவதற்கு ஆசிரியர் 'ஏடுதேடு காதலர், உருவெளித் தோற்றம்' பொல்லாங்கு 'தற்போக்கு' முதலிய தனித்தமிழ் சொல்லாட்சிகளைக் கையாண்டு மறைமலை அடிகளை நினைவுறுத்திச் செல்வதும் காரணம் ஆகும்.

'எது அன்பு? எந்த உயிரிடத்தும் காரணம் இல்லா மலேயே பள்ளந்தாழ் உறுபுனல் போல் தோன்றி வளர்வது அன்பு (பக்.9) என்று வினா விடை முறையிலும், உவமை கூறி விளக்கும் முறையிலும் சொற்றொடர்களைக் கையாண்டு திரு.வி.க.வை நினைவூட்டிச் செல்வதும் காரணம் ஆகும். அது மட்டுமன்று; 'திருக்குறள் காட்டும் சமயம், காழ்ப்புகளைக் கடந்த கவினுறு நெறி; மேடு பள்ளங்களைக் கடந்த மேலான நெறி, ஒன்றே குலம் என்ற உத்தம நெறி' (பக். 185) போன்ற எதுகை மோனைமிக்க எழில்நடையைக் கையாண்டு ரா. பி. சேதுப்பிள்ளையை நினைவூட்டிச் செல்வதும் காரணமாகும். மேலும் அகர எழுத்து ஒரு பகுதி வளைந்து கிடந்தாலும் வளைந்த வட்டத்தைத் தாண்டி ஒரு நேர்க்கோட்டில் முடிகிறது. அப்பொழுதே 'அ' முதலாக அமைகிறது. அது போலவே மனிதன் சார்புகளின் காரணமாக வளைந்து கிடக்கும் வாழ்க்கையினை நேராக்கிக் கொள்ளுதலை அகரத்தை எடுத்துக் காட்டுதலின் மூலம் விளக்குகிறார் வள்ளுவர் (பக்.187) என்று ஆசிரியர் தரும் பொருள் நயமும் நூலுள் நம்மை இழுக்கிறது எனலாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக அடிகளாரிடம் காணப்படும் மற்றொரு சிறப்பே இந்நூல் சிறத்தற்குக் காரணமாகவும் அமைகிறது எனலாம். அஃதாவது அவரின் பேச்சு நடையும் எழுத்து நடையும் ஒன்றுபோலவே அமைவது சிறப்புடையதாம். இதனால் அவர்தம் நூலைப் படிக்கும் போதும் அவர் முன்னே அமர்ந்து அவராற்றும் சொற்