பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

481



"சமயவியல்" என்ற இரண்டாம் சொற்பொழிவில் திருவள்ளுவர் கூறும் துறவுபற்றி அடிகளார் தரும் விளக்கம் அவரது சிந்தனைத் துணிவையும், புரட்சிப் போக்கையும் புலப்படுத்துவதாகும். "பெண், மண்ணும் பொன்னும் செய்யும் தீமையைச் செய்யமாட்டாள். இரக்க உணர்ச்சியைத் தூண்டி வளர்க்கும் ஆற்றல் பெண்ணுக்கு உண்டு. ஆனால் தமிழகத்துத் துறவு வாழ்க்கையில் மண்ணையும் பொன்னையும் துறக்காமல் பெண்ணை மட்டுமே துறக்கும் நெறி மேற்கொண்டதால், துறவிலும் முழுமையான வெற்றி பெறவில்லை” இக்கருத்து அடிகளாரின் திறந்த நெஞ்சப் பாங்கினைப் புலப்படுத்தும்.

"அரசியல்" என்ற மூன்றாம் சொற்பொழிவில் தனி உடைமை, பொது உடைமை பற்றிய அடிகளாரின் கருத்து ஆராய்தற்கு உரியது. "மனித குலத்திற்குத் தனி உடைமை உரிமையைத் திருக்குறள் வழங்கவில்லை. திருக்குறள் பொது உடைமையையே ஏற்றுப் போற்றியுள்ளது. அடிகளாரின் இத்துணிவுக்குரிய அகச்சான்றுகள் திருக்குறளில் உள்ளனவா என்பது விவாதத்திற்கு உரியதேனும், அது சிந்தனைக்கு விருந்தாகிறது.

சுருங்கக் கூறின், அடிகளாரின் மூன்று சொற்பொழிவு களும் திருவள்ளுவரின் உள்ளத்தை உள்ளவாறு உணர்தற்குப் பெரிதும் துணை புரிகின்றன என்பது ஒருதலை, தண்ணார் தமிழளிக்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தினின்று வெளிவரும் இவ்வரிய நூல், தமிழ் அன்னைக்குச் சூட்டப் படும் மற்றும் ஒரு மணம் மிக்க மாலையாகும்.

சொர்ணம்மாள் நினைவுப் பொழிவுகளை வெளிக் கொணர்வதற்கு ஆக்கமும் ஊக்கமும் தருகின்ற அண்ணா மலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சை.வே. சிட்டிபாபு அவர்களுக்கும், அண்ணாமலைப் பல்கலைக்கழக இணை வேந்தர் தமிழிசைக் காவலர், செட்டி