பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

491



13. திருவருட் சிந்தனை


1985-டிசம்பர்

மதிப்புரை


'பல்கலை வித்தகர்'

டாக்டர் வை. இரத்தினசபாபதி தத்துவப் பேராசிரியர்,

சென்னைப் பல்கலைக் கழகம்.


திருவருட் சிந்தனை என்ற தலைப்பில் முந்நூற்று அறுபத்தாறு தனிநிலை எண்ணங்களின் ஒரு துறைக் கோவையை கலைவாணி புத்தகாலயத்தின் மூலம் மக்கள் மன்றத்தில் மணம் பரப்ப விட்டிருக்கிறார். பாநயப்பாமணி திருக்குறள் நெறித் தோன்றல் கவிஞர் கலைவாணி சீனி. திருநாவுக்கரசு அவர்கள்.

திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்கள் ஒரு புரட்சியாளர். பழைய செய்திகளைப் புதிய தலைப்பில் தரும் இக்கால வழக்கை மாற்றி, பழைய தலைப்பில் புதிய செய்தியை மக்கள் மன்றத்துக்கு வழங்கியிருக்கிறார்.

அது மட்டுமா? மரபு நெறியில் எது பிழையோ அதைச் செய்திருக்கிறார். செய்யவும் வைக்கிறார். பிறருக்கு எழுதப் பெற்ற முடங்கலையோ, நாட்குறிப்பையோ படித்தல் பிழை. அதிலும் திருமடத்தில் அருள் தலைமையேற்று அருளாட்சி புரியும் குரு மகாசந்நிதானத்தின் வாழ்நாட் குறிப்பைப் படித்தார்.

அத்துடன் நின்றாரா? அதனை வெளியிட்டுப் படிக்கவும் வைத்திருக்கிறார் என்றால், அவரது செயல் வியத்தகு புரட்சியே. கிடைத்தது அருமை. அதை அனைவருக்கும் கிடைக்க வைத்திருப்பது அருமையிலும் அருமை.