பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

492

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்


காதலனுக்கு எழுதப்பெற்ற முடங்கலைக் காதலனின் தந்தைக்குரிய காணிக்கை முடங்கலாக அமையுமாறு எழுதிய கைவண்ணம் இளங்கோவடிகளுடையது என்றால் கடைக் கணித்து மந்தனமாகப் படிக்கப் பெற வேண்டிய நாட் குறிப்பை மந்திரமாக அமைத்து மக்கள் வாழ்வைப் பண் படுத்தும் வகையில் வாழ்வியல் ஒவியங்களாகத் தீட்டியருளிய திருவருட் கொடை வழக்கமே தவத்திரு குன்றைக் குருமனியின் திருவருட் சிந்தனை.

வாழ்வியல் சிக்கல் ஒன்று வாழ் முதலாகிய பொருள் எனப்பெறும் பரம்பொருளிடம் அடியவன் கேட்டுப் பெறுதல் முறையா?

கேட்டவர்களுக்கெல்லாம் அரிய பொருளாக அகன்று விட்டது அப்பரம்பொருள் சரி, கேளாமலேயே விட்டு விடுவோம் எனில், அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்ற உலகப் பழமொழி அவ்வப்போது நினைவுக்கு வருகிறது.

கேட்கலாம் என்றாலோ எதைக் கேட்பது? இச் சிக்கலைத் தீர்க்கும் மணிவாசகம் ஒன்று:

வேண்டத் தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீ யாது அருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில்
அதுவும் உன்தன் விருப்பன்றே"

என்ற மணிவாசகத்தின் "வேண்ட முழுதும் தருவோய் நீ!" என்ற திரு வார்த்தையின் விளக்கமாக அமைத்து அருளியதே முந்நூற்று அறுபத்தாறும்.