பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

493


குன்றக்குடி அடிகளார் என, அன்புளோர் நெஞ்சங்களாலும், தமிழ் மாமுனிவர் எனத் தமிழக மக்களின் தழை தமிழ் உணர்ச்சிகளாலும், அடிகளார் என அனைத்து நாட்டு ஆற்றல்சால் கொள்கைப் பேராளர்களாலும் பொதுச் சமய புனித நெறிச் சான்றோர் என அருள் நெறித் திருக்கூட்ட அகவுணர்களாலும், திருக்கைலாய பரம்பரைத் திருவண்ணாமலை ஆதினம் ஐந்து கோவில் ரீலயூரீ தெய்வ சிகாமணி அருணாசல தேசிக பரமாசாரிய சுவாமிகள் என மரபு பேணும் மாண்புரைகளாலும், நீள நினைந்தும் நித்தமும் கை தொழுதும் போற்றப் பெறுபவர் அடிகளார்.

வள்ளுவரே இவர், சேக்கிழாரே இவர், அப்பரடிகளே இவர் என்றெல்லாம் நினைக்கப் பெறும் அடிகளார், உண்மையிலேயே இவர் யார் என்ற வினாவிற்குத் திருவருட் சிந்தனை அடிகளாரை இவர் இன்னார் இல்லை, இனியார்! இவரைப் போல இனி யார்? என்ற வகையில் நம்மிடம் அகப்பட வைத்து விடுகிறது.

திருவாசகப் பெரும் பேரின்பத்தைத் துய்த்துத் துய்த்துத் தேக்கித் தேக்கித் திகழும் அருள் நிறை நெஞ்சம் 'போற்றிப் புணர்ந்திருந்து பொய் கெட்டு மெய்யானார்' என்ற மணிவாசகத்தின் அருளனுபவத் திரு நிகழ் நெஞ்சம் உலக மக்களுக்கு வழங்கும் வாழ்வியல் வழிகாட்டியே இந்நூல்.

இறையருட் சிந்தனைக் களஞ்சியமாகிய திருவருட் சிந்தனை மக்கள் வாழ்வில் எந்நாளும் நின்று, பணி செய்வ தாகுக.

அதனை அவ்வாறே பணி கொண்டும், மக்களைப் பணிகொள்ள வைத்தும் புரட்சி செய்யும் திருக்குறள் நெறித் தோன்றல் பாநயப் பாமணி கலைவாணி திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்களின் தொண்டு வாழ்ந்து வளம் சிறப்ப தாகும்.

சென்னை

வை. இரத்தினசபாபதி