பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

514

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்


தொடங்கிச் சைவ சந்தனாசாரியர்களால் அளவியல் முறையில் மிக நுண்ணிதாக வகுத்தும், விரித்தும் தமிழ் மொழியிலே யாவரும் உணரும் வண்ணம் விளக்கப்பட்டது. 'அங்ஙனம் விளக்கப்பட்ட நூல்கள் இவை'-என்பதையும், அவை வழியாக இத்தத்துவ ஞானத்தை உலகிற்கு அளித்து வரும் ஆதினத் திருமடங்கள் இவை என்பதையும் இந்நூலுள் அறியலாம்.

சைவ சித்தாந்தத்தை எளிய முறையில் விளக்க இக் காலத்தில் சில நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

எதைக் குறித்த போதிலும் அதனால் சமுதாயத்திற்கு என்ன நன்மை என்று நோக்கும் நோக்கத்துடனே பார்க்கும் காலம் இக்காலம், அம்முறையில், 'சமய தத்துவங்களில் சைவ சித்தாந்தமே சமுதாயத்தின் உண்மையான மேம்பாட்டினைத் தருவது'-என்னும் உண்மையினைப் பல வகையில் உணர்த்துவது, "சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்" என்னும் இவ்வுரை நடை நூல்.

இதனை இந்நாட்டிற்கு அளித்தருளுபவர்கள் மேற் குறித்த சைவ ஆதீனங்களுள் ஒன்றாய்ப் பாண்டி நாட்டில் விளங்கும் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தில் இது பொழுது அருளாட்சி செலுத்திவரும் திருப்பெருந்திரு தெய்வ சிகாமணி தேசிக பரமாசார்ய சுவாமிகளவர்கள் ஆவார்கள். ''தவத்திரு குன்றக்குடி அடிகளார்' எனத் தமிழகம் இவர்களை அழைத்து மகிழும்.

இவர்கள், 'இயல்பிலே சமுதாய நலத்தையே சிறப்பாக நோக்கும் நோக்குடையவர்கள்' என்பது நாடறிந்த ஒன்று. எனவே, இவர்கள் இத்தகையதொரு நூலைச் சமுதாயத்திற்கு ஆக்கி வழங்கியருளல் இயல்பே.

‘சமுதாய மேம்பாட்டிற்கு நற்றுணையாவது சைவ சித்தாந்தமே' என்பதை அறிவியல் முறையில் இவர்கள் நிறுவியிருப்பதைத்தான் யாவரும் ஒர்ந்து உணர்தல் வேண்டும்.