பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

531


அப்பரடிகளாக வாழ்ந்த நம் குருமகாசந்நிதானம் வரைந்த எழுத்தோவியம் நூலாக முகிழ்த்திருக்கிறது.

ஏழாம் நூற்றாண்டின் ஞானக் கதிரவனாக உலாவந்த அருள்ஞானச் சுடர் அப்பர் அடிகள், மண்மேல் சொற்றமிழ் பாடிய சுந்தரர் பெருமான், கல்லும் கரைந்துருகும் தேனார் திருவாசகம் தந்த மாணிக்கவாசகப் பெருமான் ஆகிய சமயக் குரவர்கள் சைவ சமய உலகத்தின் மாபெரும் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்கள்!

"நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்!” என்று முடியாட்சிக்கு எதிராய் முதற்குரல் எழுப்பியவர் அப்பரடிகள். சாதிச் சகதிக்குள் மூழ்கிக் கிடந்த சைவ சமயத்தைப் புனருத்தாரணம் செய்தவர் அப்பரடிகள்!

சமயகுரவர் அப்பரடிகள் எங்கே துன்பம் இருந்ததோ எங்கே அவலம் இருந்ததோ அங்கெல்லாம் பயணம் செய்தவர்! பார்வாழத் திருவீதிப் பணி, திருக்கோயில் உழவாரம் என இப்படித் தொண்டே வாழ்வாய், வாழ்வே தொண்டாய் வாழ்ந்து காட்டியவர் அப்பரடிகள்!

சமுதாயத்தின் மேடுபள்ளங்களைச் சரிப்படுத்தவும் நெறிப்படுத்தவும் முடியாமல் அன்று தொட்டு இன்று வரை, பொருளியல் தத்துவங்களும், ஆட்சி அமைப்பும் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலை மாறிடத் தர்மகர்த்தா முறையினை முதன் முதலில் உலகுக்குச் சொன்னவர் அப்பரடிகள்.

அந்த அப்பரடிகளாகவே வாழ்ந்து காட்டிய, நமது குருமாக சந்நிதானம், அப்பரடிகளின் அருமை கோட்பாட்டை, புதிய பார்வையில் பரிமாணத்தில் பார்க்கும் விதம் போற்றுதற்குரியதாகும்.

நற்றமிழ்ச் சுந்தரரின் வாழ்வு, தோழமை வாழ்வுக்கு இலக்கணம் : வாழ்த்துப் பொருளாகவும் வழிபடு பொருளாகவும் இருந்த பரம்பொருள் சுந்தரர் வரலாற்றில்