பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

532

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்


வாழ்வுப் பொருளாக, மண்ணில் சராசரி மனித உணர்வுடன் நடமாடிய பாங்கு எண்ணி எண்ணி மகிழ்வதற்குரியதாகும்; வியப்பதற்குரியதாகும். மண்ணகம் மணக்கும் நட்பு இறைவன்- ஆரூரர் நட்பு!

நட்பு தகுதி கடந்தது. உணர்வு கடந்தது. இது ஆற்றுதற்குரிய பணிதானா? என்ற வரம்பெல்லாம் கடந்து தோழமைக்குத் துணை நிற்றல், தோழனின் பெருமை குன்றாது காத்தல், தோழனின் தவற்றுக்காகத் திருத்தும் பொருட்டு ஒறுத்தும் திருத்துதல்-இவையெல்லாம் மண்ணில் நடமாடிக் காட்டிய மாதேவனின் செயல்கள்.

உறவுகளைத் துறக்கலாம்! குருதி கலந்த பந்தபாசங்களைத் தவிர்க்கலாம்! தோழமை உணர்வுகளைத் தவிர்க்க முடியாது. துறவிகளும் துறக்கமுடியாத உறவு தோழமை உணர்வு! பாசப்பற்று அறுத்தான் அறுக்க முடியாத பற்றாக தோழமை உணர்வை மண்ணிற்குக் காட்டியவிதம் எண்ணி எண்ணி இன்புறத்தக்கது.

அடுத்து, கல்லும் கரைந்துருகும் மணிவாசகமாம் திருவாசகம் தந்த மாணிக்கவாசகப் பெருமான்! நாடாளும் நல்லமைச்சர்! படை ஆள-பரிவாங்க வேண்டியவர் பார் போற்றும் திருக்கோயில் எழுப்புகின்றார்! ஆட்சிக்கு அவசியம் குதிரைகள் அல்ல; மக்கள் நலம் என்று பறைசாற்றுகின்றார்.

கல் எல்லாம் பேசும் பொற்சிலைகளாக மாற, மண் எல்லாம் விண்முட்டும் கோபுரங்களாக உருப்பெற, வண்ணம் எல்லாம் உயிர்ப்புடைய ஓவியங்களாக மாற வரலாற்றுப் பொக்கிஷமாய்த் திருக்கோயில் எழுப்புகின்றார். இச் செய்தியறிந்த அரசனால் மணிவாசகப் பெருமான் தண்டிக்கப் பெற்றவுடன் அண்டர் நாயகனே எழுந்து வருகின்றான்! அடியார்க்கு அடியவனாய் எளியார்க்கு எளியனாய் எழுந்து வருகின்றான்! மண்ணில் நடமிட்டன. அவன் பொற்