பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

533

பாதங்கள்! பண் சுமந்த தேனினும் இனிய தீந்தமிழ்ப் பாக்களுக்காக மண் சுமந்தான். அவன் பொன்மேனி புண் சுமந்தது! உலகைக் காக்கும் பரம்பொருள், தானே அடிபெற்றது எதனால்? எல்லோரும் உழைக்க வேண்டும்! அரசன் முதல் ஆண்டி வரை அனைவரும் உழைக்க வேண்டும். பெற்ற கூலிக்கு ஏற்ற நியாயமான உழைப்பினைத் தர யார் மறுத்தாலும் தண்டிக்கப்படுவர்; ஆண்டவனாக இருந்தாலும் தண்டிக்கப்படுவர், இந்தத் திருநிகழ்வு அற்புத நீதியை விளக்குகிறது என்று நம் குருமகாசந்நிதானம் புதிய விளக்கம் சொல்கிறார்கள்.

இறைவன் திருக்கோயில்களில் இன் தமிழ் மறைகள் மீண்டும் முழங்க வேண்டும்! தமிழ் கூறும் நல்லுலகத்தின் வேதமாக விளங்கும் திருமறைகள் திக்கெட்டும் முழங்குவது சமய குரவர்களுக்கு ஆற்றுகின்ற கடப்பாடு ஆகும். இந்த நூலில் சமய உலகத்திற்கு பண்ணோடு கலந்த பைந்தமிழ் உலகத்திற்கு நம் சமயக் குரவர்கள் ஆற்றிய அளப்பரிய பணிகளை நம் குருமகாசந்நிதானம் புதிய கோணத்தில் எடுத்து மொழிந்துள்ளார்கள்.

தமிழ் மந்திரங்கள் மீண்டும் திக்கெட்டும் முழங்க வேண்டும்! அவையே சமய குரவர்களுக்குச் செய்கின்ற உண்மையான கடப்பாடு, நன்றி ஆகும். குருமகா சந்நிதானத்தின் புதிய பார்வையில் மலர்ந்த இந்த நூலைப் பதிப்பித்து, பணியாற்றும் கலைவாணி சீனி. திருநாவுக்கரசு அவர்கட்கு நெஞ்சார்ந்த நன்றி, பாராட்டுக்கள்.

குருமகாசந்நிதானத்தின் நினைவுகள் மலர இந்த அரியநூலை அவர்களின் பொன்னார் திருவடிகளுக்குச் சமர்ப்பிக்கின்றோம்.


குன்றக்குடி

பொன்னம்பல அடிகளார்