பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

537


காத்துச் சமயப்பணி ஆற்றும் பொறுப்பு மிக்கவராயினும், மக்கள் பணி ஆற்றுவதிலே ஆர்வம் கொண்டவரானார்.

சமுதாயத்தில் நிலவும் வளமும்-வறுமையும் மக்களைப் பிரிப்பதைப் போன்றே-திருமடங்களினிடையேயும் நிலவும் வளநிலை வேறுபாடு ஏதுவாக வளமற்ற திருமடத்தைத் தாழ்வாக மதிக்கும் மனப்போக்கு இடம் பெற்றிருப்பதைக் கண்டார்.

திருமடங்களுக்குள்ளேயும் துறவிகளுக்கிடையேயும் வளத்தின் அடிப்படையில் வேறுபாடுகள் எண்ணப்படுகின்றன. அவ்வெண்ணத்தின் வழி மதிப்பீடு குறைகின்றது. இது ஏற்க முடியாத ஒன்று. “நயத்தக்க நாகரிகம் எப்போது மலரும்?” என்னும் வினாவை அவர் எழுப்பியுள்ளார்.

இதனால் சமுதாய வாழ்வில் நிலைபெற்ற வள வேற்றுமையால் உருவாகும் மனப்பான்மை, துறவிகளையும் அவர் தம் மடத்தையும் கூட விடவில்லை என்பது துறவு பூண்டாரின் உயர்ந்த பற்றற்ற மனநிலைக்கே இழுக்காவதை அவர் உணர்ந்தார்.

மடாதிபதிகள் புறத்தோற்றத்தால் உருவாக்கும் நம்பிக்கைக்கு உரியவர்களாக அகத்தோற்றத்தில் இருக்கவில்லை என்பது இதனால் தெளிவாகும். திருக்கோயில்களில் எழுந்தருளும் இறைவர்களுள்ளும் செல்வச் செழிப்புடைய கோயில் உடையாருக்கே எல்லாப் புகழும் பெருமையும் உளதாவது நாம் நாளும் காண்பதுதானே!

சாதி வேற்றுமையைப்பற்றி அடிகளார் குறிப்பிடுகையில், “எம்பெருமானார் என்றும் உடையவர் என்றும் - போற்றப்பட்ட ராமானுசரின் முயற்சி சாதிவேற்றுமைகளை அகற்றுவதில் வெற்றி பெறவில்லை . நம்முடைய பழக்கம் - எதையும் வாழ்த்துவோம்! வழிபடுவோம்! ஆனால் (வாழ்க்கையில் பின்பற்ற மாட்டோம்”-என்று தம் வருத்தத்தை வெளியிடுகிறார். இப்படிப்பட்ட உறுதியற்ற