பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/551

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

539


அளவு அவரது சைவப் பற்று இயல்பான தடையாக அமையினும், மாற்றார் கருத்தையும் மதிக்கும் அண்ணாவின் உளப்பாங்கையும், மற்றவர்களின் கருத்தைப் பாராட்டி வரவேற்கும் அவரது தனிச்சிறப்பையும் கண்டு அவரிடம் பெருமதிப்புடையவரானார்.

அது போன்றே தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு இயக்கம் மக்களிடையே மலிந்துள்ள மூட நம்பிக்கைகளை மாற்றுவதின் மூலமே அவர்களிடத்தில் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்க முடியும் என்னும் இலட்சியத்துடன் நடைபோடுவதையும், பெரியார் அவர்களையே நேரில் கண்டு உரையாடித் தெளிந்தார்.

தந்தை பெரியாரும் தவத்திரு அடிகளாரும் 'கடவுள்' கொள்கையில் முரண்பட்டவர்களாயினும், மக்களின் மனிதத் தன்மையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெரியாரின் தொண்டினை அடிகளார் மதித்திடலானார்.

தந்தை பெரியாருடனும், அறிஞர் அண்ணாவுடனும், முதல்வராக விளங்கிய கலைஞருடனும், என்னுடனும் அடிகளார் ஒரே மேடையில் பேசுவது என்பது. அந்தக் காலத்தில் தமிழ் மக்களால் ஒரு வியப்புடன் நோக்கப்பட்டது எனினும் மக்களிடையே மாறுபாட்டைக் குறைத்து, ஒரு பொது நோக்கை வளர்க்க ஏதுவாகியது. சமயத்தலைவராகிய அடிகளார் பெரியாரின் நன் மதிப்பையும் அண்ணாவின் அன்பையும் பெற்றவராகத் திகழ்ந்தார்.

'சமயம் அமைந்தது சமுதாய நலன் காக்கவே' என்னும் நோக்கம் அடிகளாரிடம் மேலோங்கிய போது, சமயவாதிகள் குறிப்பாக ஆதீனங்கள், அடிகளார் சமய மரபைக் காக்கவில்லை என்று கூடக் குறை பேசலானார்கள், ஆனால் அடிகளார் அவற்றைப் பொருட்படுத்தாமல் - தமது பாதையில் தொடர்ந்து தடைபோடலானார். சைவ சமயப்