பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/562

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

550

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்


துர்நாற்றம் வீசியபோது மக்கள் அங்கு செல்வதைத் தவிர்த்தனரே தவிர, துர்நாற்றத்திற்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிய முன்வரவில்லை. இளமைப் பருவ அடிகளார் தம் நண்பர்களுடன் அங்கு சென்று, அருகிருந்த பிள்ளையார் கோயிலின் உள்ளே செத்துக் கிடந்த நாயின் நாற்றமே அது என்பதை உணர்ந்து, புழுத்துப் போன சதைத் துணுக்குகளை அப்புறப்படுத்தித் தூய்மையாக்கியிருக்கிறார்.

பழமையை ஒரு சிறகாகவும் புதுமையை ஒரு சிறகாகவும் கொண்டு வாழ்க்கை வானில் மக்கட் சமுதாயம் பறக்க வேண்டுமென்பது அடிகளாரின் விருப்பம். பழமை என்பதற்காகவே எதையும் அழித்தொழிக்க வேண்டியதில்லை: புதுமை என்பதற்காவே எதையும் கண்மூடி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுமில்லை. "பழமையே புதுமையாக மாறிக் கொண்டிருக்க வேண்டும்; புதுமையாகப் பரிணமிக்காத பழமையாக இருப்பின் அந்தப் பழமை ஒன்றுக்கும் ஆகாது” என்பது அடிகளார் வாக்கு.

கருத்து வேறுபாடுடையவர்களிடம் பகை பாராட்டுதல் தவறு. அவர்களோடு பேசி இருவருக்கும் இயைந்த ஒரு சரியான முடிவுக்கு வரவேண்டும் என்பதில் அடிகளார் மிகுதியும் அக்கறை கொண்டவர். தந்தை பெரியாரை முதலில் அடிகளார் ஏற்கவில்லை; ஆனால் பெரியார் அவர்களைக் கண்டு உரையாடியதன் பின்னர் பெரியார் கூறும் கருத்துகளிலுள்ள உயிர்த் தன்மையை உணர்ந்தார்- மூடநம்பிக்கை ஒழிப்பில் பெரியாரோடு முற்றிலுமாக ஒன்றுபட்டு உழைத்தார்.

சாதி, சமயக் கொடுமைகளைச் சுட்டிக்காட்டினார் பெரியார், “இவற்றைக் கடவுள் செய்யவில்லை” என்றார் அடிகளார். "அப்படியானால் இந்த அநியாயத்தைக் கடவுள் ஏன் தட்டிக் கேட்கவில்லை” என்றார் பெரியார். பெரியார் கூறுவது நியாயந்தான் என்பதை அடிகளார் உணர்ந்தார்.