பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

67


நாம் இளமைக்காலம் முதலே இதழ்கள் படிப்பதில் ஆர்வம் காட்டி வந்துள்ளோம். நாம் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து படிக்கும் இதழ்கள் உண்டு. பள்ளியில் பயிலும் காலத்தில் இதழ்கள் படிக்கும் ஆர்வத்தில் நாம் படித்த கடியா பட்டியில் இருந்த, 'ஜோதி கிளப்'புக்கு நாள்தோறும் செல்வது உண்டு. 'ஜோதி கிளப்' என்பது வசதி படைத்தவர்கள் பொழுது போக்குக்காக நிறுவியது. ஜோதி கிளப்புக்குச் சுதேசமித்திரன், ஹனுமான், ஹரிஜன், ஆனந்த விகடன் போன்ற இதழ்கள் வரும், நாள்தோறும் சென்று இதழ்களைப் படிப்பது பழக்கம். என்ன காரணத்தினாலோ ஒரு நாள் திடீரென்று 'ஜோதி கிளப்பின் அங்கத்தினர்களைத் தவிர, மற்றவர்களுக்கு அனுமதி இல்லை' என்று அறிவிப்புத் தொங்கவிட்டிருந்தார்கள். பார்த்தவுடன் அதிர்ச்சியாக இருந்தது. அங்கத்தினர்களாகவும் சேர்க்க மறுத்துவிட்டனர்! என்ன காரணம்? வர்க்க உணர்ச்சியேயாம்!

உடன் சூடு பிறந்தது. நண்பர்களைத் திரட்டினோம். ஒன்றாகக் கூடினோம். செயல் பிறந்தது! ஆம்! அந்த ஆண்டு 1942-விடுதலைப் போராட்டம் சூடு பிடித்திருந்த காலம்! அண்ணல் காந்தியடிகள் தனிநபர் சத்தியாக்கிரகத் திட்டத்தை அறிவித்த ஆண்டு. புனிதர் வினோபாபாவே அவர்களை முதல் தனிநபர் சத்தியாக்கிரகியாகத் தேர்வு அறிவித்த செய்தி நம்மையும் நமது நண்பர்களையும் கடுமையாகப் பாதித்திருந்தது!

உடன் வினோபாபாவே பெயரில் வாசகசாலை தொடங்கினோம். இருபது அங்கத்தினர்கள் ஆளுக்கு ஓர் இதழ் ஆண்டுச் சந்தா கட்டி, இதழ் வாங்கித் தந்தனர். உடன் பயின்ற மாணாக்கர்கள் பலர், இன்று பழனியப்பா பிரதர்ஸ் என்ற பெயரில் புத்தக வியாபாரத்தில் தலைசிறந்து விளங்கும் எஸ்.எம். பழனியப்பன் ஒருவர். இவர் ராயவரத்தைச் சேர்ந்தவர். இவர் கல்கி, சுதேசமித்திரன் வாங்கித் தந்தார். அடுத்து வாசகசாலைக்கு அடிக்கடி வந்து ஊக்குவித்து