பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அடுத்து, அருட்டிரு விபுலானந்த அடிகளுக்குப் பணிவிடை செய்யும் இனிய வாய்ப்புக் கிடைத்தது. மாலை நேரத்தில் பெரும்பாலும் விபுலானந்த அடிகள் வீட்டிலே தான் இருப்போம். விபுலானந்த அடிகள் தொடர்பால்தான் தீண்டாமை விலக்கு உணர்வும் மனிதநேயமும் நமது வாழ்க்கையில் குறிக்கோள்களாக அமைந்தன. அருட்டிரு விபுலானந்த அடிகள் வெள்ளிக்கிழமைதோறும் இரவு 7 மணிக்குத் திருவேட்களத்தில் உள்ள ஆதி திராவிடர் குடியிருப்புக்குச் சென்று அங்கு பிரார்த்தனைக் கூட்டம் நடத்துவார்கள். அந்தக் குடியிருப்பிலுள்ள மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பார்கள். பொட்டுக்கடலையும் சர்க்கரையும் வழங்குவார்கள். அப்போதெல்லாம் நாம் அடிகளுடன் அரிக்கேன் விளக்கு எடுத்துக் கொண்டு செல்வோம்.

அருட்டிரு விபுலானந்த அடிகளுடன் அதிகநேரம் நமக்குக் கிடைக்கும். காரணம், அடிகளுக்குப் பணிவிடை செய்வதற்கு நாமே பொறுப்பு. அப்போது சுவாமி சகஜானந்தர் அவர்கள் சிதம்பரத்தில் நந்தனார் கல்வி நிலையம் தொடங்கி நடத்தி வந்தார்கள். நந்தனார் விழாவும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். ஒரு தடவை விழாவுக்கு நாமும் அடிகளுடன் சென்றிருந்தோம். அடிகளை மேடைக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள். நம்மைப் பொடியன்களுடன் உட்கார வைத்துவிட்டார்கள். எல்லாம் புதுமுகம்.பயம்! அழுகை வந்துவிட்டது. நாம் அழுததைப் பார்த்ததும் அடிகள் நம்மை மேடைக்கு அழைத்துக் கொண்டார்கள். மேடையில் கொஞ்ச நேரம் போனதும் 'தூக்கம்' போட்டோம். அடிகளின் தொடர்பு இளமை யிலேயே ஆர்வத்தைத் துண்டியது. அடிகளைப் பிரியக் கூடாது என்ற உணர்வு மேலோங்கியது. இந்த நிலையில் அடிகள் இலங்கைக்குத் திரும்பிச் செல்வதாகத் திட்டம். இதைத் தெரிந்துகொண்ட நாமும் அடிகளுடன் இலங்கைக்கு