பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கடன் என்ற சொல்லின் வழிப் பிறந்த சொல். நாம் இந்த நாட்டிற்குக் கடமைப் பட்டிருக்கிறோம். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழ்ந்து, இந்த நாட்டை வளப்படுத்திய சென்ற கால வரலாற்றைச் சேர்ந்த ஆயிரம் ஆயிரம் பேருக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.

இன்றுள்ள நஞ்செய்யும் ஒரு காலத்தில் காடு மேடு தான்! காடு வெட்டி நிலம் திருத்திக் கழனியாக்கியவர்களுக்கு நாம் என்ன கைம்மாறு செய்ய இயலும்? மூவாயிரம் ஆண்டு களுக்கு முன்பிருந்தே இலக்கியங்களைக் கண்டு இலக்கணங் களைக் கண்டனர். நாளும் நமது ஆன்மாவைச் செழுமை . படுத்துபவை இந்த இலக்கியங்கள்; ஆன்மாவின் தரத்தை உயர்த்தும் படைப்புகள். ஏன், நமதுகாலத்தில், நமது தலைமுறையில், நம்முடைய வாழ்க்கைக்காக வாழ்க்கையின் உயர்வுக்காக உழைக்கும் உயிர்கள் ஒன்றா, இரண்டா? இல்லை பல நூறு ஜீவன்கள்-பல உயிர்கள் கடின உழைப்பின் மூலமே நமது வாழ்க்கையை நகர்த்துகின்றன. நாளும் நமது வாழ்க்கையை நகர்த்தும் அறிஞர் உலகத்துக்கு-உழைப்பாளர் உலகத்துக்கு நாம் என்ன திரும்ப அளிக்கிறோம்? ஒன்றும் இல்லை.

நமது முன்னோர்கள் நமக்கு அளித்தவை பிரமிப்பூட்டுவன. பத்தொன்பதாம் நூற்றாண்டினர்கூட நமது நாட்டு மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்தனர். இன்று வாழும் . நாம், அடுத்த தலைமுறைக்கு என்ன தர இருக்கிறோம்? சிந்தனை செய்யுங்கள்; எளிமையின் பெயரால், புதுமையின் பெயரால் பழந்தமிழ் நூல்களைப் படித்துணரும் திறன் குறைந்து வருகிறது. ஏன், பதினைந்து முதல் முப்பது மதிப்பெண்கள் வாங்கினாலே போதும் - தேர்வில் வெற்றி! இது ஒரு பயங்கரமான அறிவுச் சேதாரம் இல்லையா?

சென்ற தலைமுறைகளில் இருந்ததை விட இந்தத் தலைமுறையின் பண்பாட்டில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.