பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

83


கார்டுகளில் கண்டுள்ளபடிதான் அவரவருக்கும் அரிசி கிடைக்கும். அதுபோலத்தான் அவரவருக்கும் பரம்பொருள் ஆணைப்படி- வினைப்பயனுக்கு ஏற்ப வழங்கப்படுகிறது என்று கதை அளப்பர். 'ரேஷன் கார்டு'களின் தரம் நாம் அனைவரும் அறிந்ததே! வினைசெயல் வழி பயன் உண்டு என்பது உண்மையே! ஆயினும் அறிவறிந்த ஆள்வினையின் மூலம் செயலை வளர்த்துச் செயலின் பயனையும் கூட்டலாம் என்பதே உண்மை. இதனை திருஞானசம்பந்தர் அருளிச் செய்த தேவாரத்தின் மூலம் உணரலாம்.

"அவ்வினைக் கிவ்வினையாம்
என்று சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடாது இருப்பதும்
உந்தமக்கு ஊன மன்றே!
கைவினை செய்து எம் பிரான்
கழல் போற்றுதும் நாமடியோம்!
செய்வினை வந்து எமைத்
தீண்டாய் பெருதிரு நீலகண்டம்!”

என்பது தேவாரம். இந்த நம்பிக்கை நமது நாட்டு மக்களி டையில் வளர்க்கப் பெற்றால் மக்கள் வளர்வர்; மக்களின் செயல்திறம் வளரும். நாடு வளரும்.

இந்த உணர்வை நம்மிடையில் தூண்டி வளர்ப்பது, நம்மைச் சூழ்ந்திருக்கின்ற அவமானத்தை, இழிவை, வறுமையை எதிர்த்துப் போராடத் தேவை சுரணையே! சூடே! தனிமனிதனின் அறியாமையைச் சமூக ரீதியாக மாற்றியமைக்க விரும்பிய பாவேந்தர் பாரதிதாசன்,

'கல்வி நல்காக்

கசடர்க்குத் தூக்குமரம் அங்கே உண்டாம்'