பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

101



சாதாரணமாகக் கிராமங்களில் பாரதக் கதையை ஆண்களும் பெண்களும் கூடி இரவு முழுதும் கேட்பர். பாரதம் படித்தால் மழை பொழியும் என்ற நம்பிக்கை இன்றும் நிலவுகிறது. ஒரு மொழியில் தோன்றிய காவியம் மொழியால், வாழ்க்கை முறைால் மாறுபட்ட பிறிதொரு இனத்தில் செல்வாக்குப் பெறுவதென்பது சிறப்புத்தான். அந்த வகையில் மகாபாரதம் சிறந்த காவியம் என்பதில் கருத்து வேறுபாடில்லை.

ஆயினும் மகாபாரதம் ஒரு குடும்பத் தகராறில் பிறந்த காவியம்; சொத்துச் சண்டையில் பிறந்த காவியம். சொத்துக்களுக்காகப் பங்காளிகள் யுத்தம் செய்து கொள்ளும் கொடிய காட்சியைக் காவியத்தில் பார்க்க முடிகிறது. காவியத்தின் நாயகனே சூதாடுகிறான். பெருமைப்படுத்தப் பட வேண்டிய பெண்மை இழிவுப்படுத்தப்படும் அளவுக்கு வளர்ந்த சின்னத்தனம் காவியத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஆதலால், மகாபாரதக் காவியம் ஒரளவு வளர்ந்த- பக்குவப் பட்ட மக்களிடத்தில்தான் பயனைத்தர முடியும். அதோடு, மகாபாரதம் தனிமனித ஒழுகலாற்றுச் சிறப்புக்களை எடுத்துக் கூறுவதிலேயே சிறப்புற்று விளங்குகிறது. ஒருமைப்பாட்டுக்கு மகாபாரதம் பயன்படுவது ஒரளவே.

இராமகாதை மிகச் சிறந்த காவியம். தமிழில் கம்பன் மிக அற்புதமாக அக்காவியத்தைப் படைத்திருக்கிறான். இனிய நெறிகளை இலக்கியச் சுவையுடன் படைப்பதில் கம்பன் வெற்றி பெற்றுள்ளான். இராமகாதையும் ஓர் அரச குடும்பத்தின் காதையே. மாற்றாந்தாயின் கொடுமையால் கதை வளர்கிறது. இராமகாதையிலும் அண்ணன் தம்பிகளில் யாருக்கு அரசுரிமை என்ற பதவி மோதலே. ஆனால், இராமன் உரிமையின் பெயரால் மோதாமல் தம்பிக்கு விட்டுக் கொடுத்துத் தான் காட்டுக்குப் போய் விடுகின்றான். இராமனின் பண்பாடு, தியாகம் மிகமிக உயர்ந்தது.