பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மக்களாட்சி முறை நிலவும் நாட்டில் தேர்தல் வெற்றி, தோல்விகள் நெடிய காழ்ப்புக்கும் பகைக்கும் வித்திடுகின்றன. இராமனின் பண்பு நாடு முழுதும் கால் கொள்ளுமானால் அமைதியான தேர்தல் அரசியலில் நடைபெறும். இராம காதையில் ஒருமைப்பாட்டுக்குள்ள வித்துகள் நிறைய உண்டு.

அயோத்தியில் அரசகுடும்பத்தில் பிறந்த அண்ணல் இராமனுக்கு வானரகுலத்துச் சுக்கிரீவனும், அரக்கர் குலத்து வீடணனும், வேடுவர் குலத்துக் குகனும் உடன்பிறந்தார்களாகின்றனர். இஃது இனங்களைக் கடந்த ஒருமைப்பாடுதானே! ஆயினும், நாடு, பெண் தொடர்பான சண்டைகள், அவ்வழிப்பட்ட கொலைகள் மலிந்த காவியம். ஆதலால், இராமகாதை ஒருமைப்பாட்டுக்கு நூற்றுக்கு நூறு என்ற அளவில் துணை செய்ய இயலாது. இராமாயணம், பாரதம் என்ற நாட்டளவில் பயிலப்படும் இவ்விரண்டு காதைகளே ஒருமைப்பாட்டை வளர்க்க இயலாதென்றால் அந்த இடத்தில் வேறு எந்த நூலை வைத்து எண்ணுவது?

ஒருமைப்பாட்டை வளர்க்கும் தேசீயத் தன்மையுடைய நூல் வேற்றுமைகளை-சண்டைகளை விளக்காத நூலாக இருக்க வேண்டும். பொதுவான அறங்களைக் காட்ட வேண்டும். எல்லா மொழிவழி இனத்திற்கும், அந்த நூல் கூறும் அறநெறி ஏற்புடையதாக இருக்கவேண்டும். எல்லோரும் படித்தற்கு எளிதாகவும் இருக்க வேண்டும். அது விதித்தன செய்ய வழிகாட்டும் நூலாகவும் இருக்கவேண்டும். செய்யத் தகாதனவற்றை விலக்க வழி காட்ட வேண்டும். இந்த வகையில் மனித குலத்தை ஒருமைப்பாடுடையதாக-வளர்க்கத்தக்கதாக அமைந்துள்ள ஒரே நூல் திருக்குறளேயாகும்.

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்.

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.