பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



துடித்தது. உலகத்தின் எல்லாப் பகுதிகளிலும் இந்த ஆர்வம் தலையெடுக்காது போனாலும், ஐரோப்பிய நாடுகளில் சர்வாதிகாரத் தன்மையுடைய முடியாட்சியை எதிர்த்துப் புரட்சிகள் தோன்றின. புரட்சி என்பது வெளி உலகத்தில் தோன்றக் கூடியதன்று. எந்த மனித சாதி விடுதலையை அடைந்து அனுபவிக்க விரும்புகிறதோ, அந்த மனித சாதியில், அக நிலையிலேயே விடுதலை ஆர்வம் கொழுந்து விட்டு எரிய வேண்டும். மாமேதை இலெனின் புரட்சி உருவாகும் விதத்தை அடியிற் காணுமாறு விளக்குகிறார்.

"கோழி முட்டை ஒட்டுக்குள் உயிர்க் கரு இருக்கிறது. அது வளர்ந்து வரும்போது அதனுடைய வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் முட்டையின் ஒடு தடையாக இருக்கிறது. முட்டைக்குள் இருக்கும் குஞ்சு தன்னுடைய வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் ஒட்டை முட்டி முட்டி உடைக்கிறது. முட்டை ஓடு உடைகிறது. குஞ்சு வெளியே வருகிறது”

"அதுபோல மனிதன் வளர்ந்துவருகிறான். அல்லது மனிதகுலம் வளர்ந்து வருகிறது. தன்னுடைய வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் சக்திகளை எதிர்த்துப் போராடுகிறான் - எதிர்த்துப் போராடும் மனப்பான்மையைப் பெறுகிறான் - புரட்சி தோன்றுகிறது; மனித உலகம் இயற்கை அளித்த சுதந்திரத்தை ஆழ்ந்து அனுபவிக்கிறது.”

இங்ஙனம் மனித உலகம் செய்த புரட்சிகளில் நினைவில் நிலைத்து நிற்கும் புரட்சி, பிரெஞ்சுப் புரட்சியாகும். இது 1789ல் நடந்தது. சர். வால்டேர் ரூசோ இந்தப் புரட்சியை அறிவுக் கருவில் வைத்து வளர்த்துத் தந்தவர். 'சமுதாய ஒப்பந்தம்' என்ற அருமையான அரசியல் நூலைத் தந்ததும் ரூசோவே. மனித உலகம் முழுவதற்கும், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற தத்துவங்களையும் மந்திரங்களையும் தந்தது பிரெஞ்சுப் புரட்சியே. பிரெஞ்சுப்