பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திருவள்ளுவர். காலத்தால் திருவள்ளுவர்க்கு மிகப் பிந்தியவர்களே ரூசோவும், கார்ல் மார்க்சும். ஆனாலும் திருவள்ளுவரின் அரசியல் சமுதாய பொருளாதாரச் சிந்தனைகள் மிக முற்போக்கானவை. கார்ல்மார்க்சீயச் சிந்தனைக் கருக்களைத் திருக்குறளில் காணலாம்.

இந்த நூற்றாண்டில் மனித குலத்தின் தேவை சோஷலிச சமுதாய அமைப்பு. தமிழர்கள், காரல் மார்க்சீயச் சிந்தனைக்கு எதிராகச் சிந்திக்காது போனாலும் தங்களுடைய சமுதாய அமைப்பு, திருவள்ளுவர் வழியதாக அமைய வேண்டும் என்றே விரும்புவார்கள். அதுவே இயற்கை.

திருக்குறளை வாழ்க்கையில் பயில்க

திருவள்ளுவர் அருளிச் செய்த திருக்குறள், உலகப் பொது மறை. மிகச் 'சிறந்த சமயநூல்; அறிவிற்கும் அனுபவத் திற்கும் உரிய சமயநூல். நம்பிக்கைக்கும் நல்லெண்ணத்திற்கும் உரிய ஒப்பற்ற நூல். கல்லாடர் கூறியதுபோல் "சமயக் கணக்கர் மதிவழிச்" செல்லாது, அதேபொழுது சமயத் தெளிவினைத் தரும் தெள்ளுதமிழ்ப் பொதுமறையாகத் திகழ்கின்றது.

திருக்குறள், கடவுள் நம்பிக்கையை ஒத்துக்கொள்கிறது; ஒரு கடவுளை ஒத்துக் கொள்கிறது. அந்தக் கடவுளை நிறைகுணங்களின் உருவமாகவே படைத்துக் காட்டுகிறது: ஆயினும், உயிர்க்குப் பற்றுக் கோடாகத் திகழவேண்டும் என்ற அடிப்படையில் திருவடியைக் காட்டுகிறது. இறைவன்றன் திருவடியைப் பேசுதல்-பற்றுதல் அருள் முதிர்ந்த உயர் நிலையாகும்.

திருக்குறளுக்கு உயிர் உண்டு என்ற கொள்கை உடன்பாடு. இந்த உயிர் ஒன்றல்ல, பலப்பல என்பதைப் பன்மை விகுதியிட்டுக் குறிப்பிட்டதனாலேயே அறிய