பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

107


முடிகிறது. அதோடு, உயிர் இயல்பிலேயே அறியாமை உடையது என்பதும், உயிர் முயன்று அறிவினைப் பெற்று உயர முடியும் என்பதும், திருக்குறள் கொள்கை. உயிர்க்கு அறியாமையின் சார்பும், அச்சார்பினின்று விலக அவை செய்யும் அறிவு முயற்சியும், இம்முயற்சியில் அவை ஈடுபடும் பொழுது உருவாகும் வினைச் சார்புகளும், வினைச்சார்பு நீங்கிய பின், பெறுகின்ற விண்ணிற்குயர்ந்த தூய இன்பத்தையும் திருக்குறள் தெளிவாகப் பேசுகிறது. ஆதலால், திருக்குறள் உயிர்-இறை-தளை என்ற மூன்றும், என்றும் உள் பொருள் என்று நம்பும் தத்துவச் சமய நூலாகும்.

திருக்குறள் ஒரு பொதுமறை. ஆங்குப் பிறப்பினால் உருவாகக்கூடிய சாதி வேறுபாடுகள் இல்லை. "பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனினும், செயல்களாலும் குணங்களாலும் வேறுபாடுகள் இருந்தாலும், அவ்வேறுபாடுகளைக் காட்டிக் கொள்ளக் கூடாது என்னும் பொருள்படச் "சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” என்றும் அறிவுறுத்துகின்றது.

திருக்குறள் ஒருகுலநெறி உணர்த்தும் ஒருநூல்; வையத்து வாழும் இயல்பினைக் காட்டி வாழ்வாங்கு வாழச் செய்து வானுறையும் தெய்வத்துள் சேர்த்து, வானோர்க்கும் உயர்ந்த உலகம் அடையும் வழிகாட்டும் அருள்நூல். திருக்குறள் பயிற்சி, தெளிந்த அறிவைத் தரும். திருக்குறட்சார்பு சஞ்சலம் கெடுக்கும். திருக்குறள், பிறப்பின் அருமை காட்டி, பிறப்பின் பயன் கூட்டும் பேரற நூல். திருக்குறள் ஒழுக்கம், உயர்வு நலஞ்சான்ற ஒழுக்கமாகும். அஃதோர் அருளியலைக் காட்டும் மாமறை. திருக்குறளை வாழ்க்கையில் ஏற்று ஒழுகுதல், இன்ப அன்பினைத் தரும்; இறையருளில் சேர்க்கும். அனைவரும் திருக்குறள் பயில்க! திருக்குறள் நடையை வாழ்க்கையில் பயில்க!


கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.