பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை விளக்கு

111


மோதும் மனித உணர்வுகளை ஒழுங்கு செய்யும் ஒப்பற்ற உணர்வு நூல்; வேற்றுமைகளைக் கடந்து மனிதகுல ஒருமைப்பாட்டை உணர்த்தும் நூல்; மண்ணகத்தை விண்ணகமாக்கும் உயர்ந்த தத்துவங்களடங்கிய விந்தை நூல்; புதுமையும் பொதுமையும் பொலிவுற்றிருக்கும் பொது நூல்! வேறுபாடுகளற்ற ஒப்பற்ற பொதுமைச் சமுதாயம் காண்பதற்குரிய கருப்பொருள்கள் வள்ளுவத்தில் கால்கொண்டு கிடக்கின்றன. திருக்குறளில் கால்கொண்டு கிடக்கின்ற பொதுமைக் கருத்துக்களுக்கு கார்ல் மார்க்ஸ் மாமுனிவர் உரை விளக்கம் செய்தாரோ என்று கருதினாலும் தவறில்லை. கார்ல் மார்க்ஸ் மாமுனிவரின் மூதறிவிற் பிறந்த மூலதனத்திற்கு வாழ்க்கையில் விளக்கம் காண விளாதிமிர் இலியட் லெனின் முயன்றார். கார்ல்மார்க்ஸ் செய்த தவத்தை வள்ளுவன் செய்யவில்லையோ? இல்லை, இல்லை! வள்ளுவன் உயர்த்திப் பிடித்த ஒளிவிளக்கை வள்ளுவனே அஞ்சிய அவன் இனச் சார்பு மூடி மறைத்துவிட்டது! ஆனாலும், உலகப் பேரொளியாகப் பிறந்த குறள், உலகில் வழங்கும் தகுதி பெற்றது; அத்தகுதியைப் பெற்று வருகிறது; இனியும் பெற்று விளங்கும்.

வள்ளுவம் போன்ற நூல்களுக்கு நிகண்டுகள்வழிப்பொருள் காண்டது ஓரளவு வரவேற்கத் தக்கதே. யாயினும், அது போதாது. வள்ளுவன் பொழுது போக்கிற்காக அதனைச் செய்தானா? அல்லது காவியம் செய்தானா? அவன் படைத்த காமத்துப் பாலில்கூட இரண்டு உயிர்களின் உணர்வுகளை உளவியல் அடிப்படையிலல்லவா இணைக்கின்றான்! குறைகளை நீக்குகின்றான்; குணங்களைக் காட்டுகின்றான்; இன்புறுத்துகின்றான்! வாழ்வாங்கு வாழ்வது என்று சொன்னானே, அதற்குரிய நெறிகளையும் முறைகளையும் அவனே காட்டுகின்றான். ஆயினும், இதுகாறும் நாம் கண்டு சுவைத்தது கவிதைச் சுவையையே. செவிப்