பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


புலனுக்குச் சுவையாக மட்டுமா செய்தான்? உயிர்ச் சுவையும், உணர்வுச் சுவையும் கூட்டிப் பாடிய கவிஞனின் ஆற்றல் என்னே! என்னே!!

கார்ல்மார்க்ஸ் மாமுனிவன் செய்த மூலதன நூலுக்கு விளக்கம் கொடுத்து, வையகத்தில் விளங்கிடச் செய்த பெருமை லெனினுக்கே உண்டு. லெனின், ஒரு சிந்தனையாளன்; வாழ்க்கைப் பட்டறையில் புடம் போட்ட சுடர்த்தங்கம். அவன் கற்பனையில் வாழ்ந்ததில்லை. அறிவு, அனுபவம் ஆகிய இரண்டினை மையமாகக் கொண்டே அவன் தத்துவங்கள் தோன்றின. லெனின், மனிதாபிமானத்தின் உச்ச நிலையில் உணர்வு பூர்வமாகவும், அறிவு பூர்வமாகவும் வளர்த்த மேதை அப்படியே வாழ்ந்து காட்டியவன்-வாழத் துரண்டியவன். மனிதாபிமானம் என்பது உலகின் எல்லா மொழி இலக்கியங்களிலும், சிறப்பாகப் பக்தி இலக்கியங்களிலும் பரக்கப் பேசப்படுகின்றது. லெனினுக்கு முன்பே இங்ஙனம் பேசிய மொழிகள் உண்டு. ஆயினும், அவை உணர்ச்சிகளையே வெளிப்படுத்தின - அழுது தீர்த்தன. அந்த உணர்ச்சிகளுக்குச் செயல் உருவத்தை அந்த இலக்கியங்களைப் பாராட்டியவர்கள் கொடுக்கத் தவறி விட்டார்கள். வெறும் உணர்ச்சி அல்லது அழுகை, வாழ் வித்துவிடுமா என்ன? 'அறிவினா லாகுவதுண்டோ? பிறிதின் நோய்- தந்நோய்போல் போற்றாக்கடை' என்றான் வள்ளுவன். 'அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்' என்றும், 'ஈசனுக்கன்பில்லார் எவ்வுயிர்க்கும் அன்பில்லார்' என்றும் கூறினார் திருமூலர். இவைகளையெல்லாம்விட மனிதாபிமானத்தின் உச்சக்கட்ட வெளியீடாக 'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்' என்று உருகி உருகி வெளியிட்டார் வள்ளல் இராமலிங்க அடிகள். இந்த உணர்வு வெளியீடுகள் என்ன பயனைத் தந்தன? சமுதாயத்தில் என்ன மாறுதல்களை உண்டாக்கியிருக்-