பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தாம்இன் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்

என்று கூறுகிறார். இந்தத் திருக்குறளுக்கு உரையாக லெனின் வாழ்க்கை அமைந்திருக்கிறது.

தாக்கிஸ்தான் விவசாயி ஒருவர் லெனினைப் பார்க்கச் சென்றார். அதுபோது தாக்கிஸ்தானைச் சேர்ந்த கைவினையிற் சிறந்த தொழிலாளர்கள் செய்த சில பொருட்களை லெனினுக்குப் பரிசிலாகக் கொண்டு சென்றார். லெனின் அவர்களின் கைவினைத் திறனைப் பாராட்டினார். ஆனாலும், அந்தப் பரிசுப் பொருட்களை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கு லெனின் சொன்ன ஒரே காரணம்; "இந்தப் பொருள்களின் அழகை எல்லோரும் பார்த்துப் பாராட்ட வேண்டும்” என்பதேயாகும்.

(“It would be unfair for me admire them alone" Every-body should have a chance to admire them; send them to a museum.)

எல்லா அழகையும் தாமே அனுபவிக்க வேண்டுமென்றது அறிவெனக் காட்டும் அறியாமையை லெனின் தம் வாழ்க்கையின் மூலமாகவே கடிகின்றார். அறிவு என்பது ஒரிடத்திற்கோ, ஒரினத்திற்கோ, ஒரு மனிதனுக்கோ மட்டும் சொந்தமில்லை. அறிவு, எல்லா மனிதர்களிடத்தும் உண்டு. ஆயினும், வளர்ச்சியடையாமலும், முழு நலம் பெறாமலும், தொய்வுகள் உடையதாக இருக்கக் கூடும். ஒரு சிறந்த அறிஞன் என்பவன் மற்றவர்களுக்கு ஒன்றுமே தெரியாது என்ற மனோபாவத்தில் மற்றவர்களை முட்டாளாக்கி, அவ்வழி தன்னையும் முட்டாளாக்கிக் கொள்ளக் கூடாது. மற்றவர்களிடத்திலிருந்தும் சிறந்த செய்திகளைக் கேட்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செவிமடுக்க வேண்டும். இன்றுதான் வளர்ந்தவர்களாகத் தம்மைக் கருதுபவர்கள்