பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


னார். அதைவிடச் சிறப்பாகத் தமது வாழ்க்கையின் மூலம் உணர்த்தினார். லெனினுடைய வீட்டுப் பாதுகாப்புத் தொண்டின் ஈடுபட்டிருந்த ஒரு பெண் தொழிலாளியின் உணர்ச்சிக் கொப்பளிப்பும் அதற்கு லெனின் சொன்ன சமாதானமும் நினைந்து நினைந்து நெஞ்சு நெகிழத்தக்க செய்திகளாகும்.

ஒரு நாட் காலை லெனினுடைய உடுப்பைப் பெண் தொழிலாளி தூய்மை செய்து கொண்டிருந்தார். அது கிழிந்தும், ஒட்டுகள் போட்டும் இருந்தது. அந்தப் பெண் தொழிலாளி தன்னுடைய உணர்ச்சியை அடக்கமாட்டாமல் 'நாடு முழுதும் நிர்வாகம் செய்யும் லெனினுக்குத் தனக்கொரு நல்ல உடுப்பு வாங்கிக் கொள்ள முடியவில்லையே' என்று வாய் விட்டுச் சொல்லி முணுமுணுத்தாள். தற்செயலாக அந்த இடத்திற்கு வந்த லெனின் காதில் இந்த முணுமுணுப்பு விழுந்தது. அவர் இதைக் கேட்டு ஒரு வெடிச்சிரிப்பே சிரித்தார். "பரவாயில்லை, பரவாயில்லை" என்று இரண்டு தடவைகள் கூறி, மிகவும் பிரியத்துடன் அந்தப் பெண் தொண்டரின் தோள்களைத் தட்டி, "நாம் எப்பொழுது செல்வத்தில் வளருகிறோமோ அப்பொழுது நானே எனக்கொரு நல்ல உடுப்பை வாங்கிக் கொள்வேன். அப்பொழுது உனக்குக் கொஞ்சம் தொல்லையும் குறையும்" என்று கூறினார். இந்த உரை, நம்மைக் கவர்ச்சிப்பதைவிட அடக்கமான-ஆழமான மனித சமுதாயத்தைத் தழுவிய லெனினின் சீலத்தை - உயர் மேம்பாட்டை நமக்கு உணர்த்துகிறது.

லெனின் தத்துவ இயல் அறிஞன்; சிறந்த சிந்தனையாளன்; செயல் வல்லன்; வையத்து வேறுபாடுகளை அகற்ற வந்த விடிவெள்ளி; அவன் புகழ் நமக்கு ஒளி நிறைந்த வழிகாட்டி, அவன் வழி நடை பயிலுவோமாக! வையகத்தை வாழ்வித்து வாழ்வோமாக! மகிழ்வித்து மகிழ்வோமாக!