பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்ற ஒன்றைத் தவிர, மற்ற எந்த ஒழுக்க நெறிகளையும் யாரும் மறுக்க மாட்டார்கள். புலால் உண்ணாமையும் கூட குறையாகக் கூறினால் துறவறவியலிலேயே இருக்கிறது. ஆதலால் இல்வாழ்வோர் புலால் உண்ணுதலைத் தவிர்க்க வேண்டும் என்ற அவசியமில்லை என்று வரையறுத்தால் அதற்கும் மறுப்பில்லை.

மனித சமூகத்தினைச் சார்ந்த ஒழுக்க நெறிகளைப் பேணி வளர்த்துப் பாதுகாக்க வேண்டும். இதுவே திருவள்ளுவரின் இலட்சியம். இந்த ஒரே நோக்கத்தோடு செய்யப்பெற்ற நூல் திருக்குறள். திருக்குறள் பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் என்று வரையறுத்துக் கூறுவதால், 'ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்' என்று கூறினமையால் சமூக ஒழுக்க நெறியை எடுத்துக்காட்டுகிறது. ஒழுக்கங்களில் உயர்ந்த ஒழுக்கமாகிய ஒப்புரவினால், பொருளியல் ஏற்றத் தாழ்வுகளை மாற்ற முடியும். பொருளியல் ஏற்றத்தாழ்வு குறைந்து சமநிலைச் சமுதாயம் அமைந்தால் சமுதாயமும் ஒன்றுபடும்; ஒழுக்க நிலையும் உயரும்; இன்பமும் பெருகும்.

திருவள்ளுவர் கல்வியை ஒருமைப்பாட்டுக் கல்வியாகவே கருதுகிறார். ஒருமையுணர்வினைத் தராத கல்வியை-அறிவைத் திருவள்ளுவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்

என்றும்,

எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு

என்றும் கூறியிருப்பது அறியத்தக்கது. எல்லா நாடுகளையும், எல்லா ஊர்களையும் தமதென ஏற்றுத் தழுவி வாழுதலுக்கே கல்வி தேவையென்று கருதுகின்றார். இதனை,