பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை விளக்கு

127


இணைக்கும் பெருநூல்; புதுமையும் பொதுமையும் தழுவிய மறைநூல்; இருளகற்றும் அறிவு விளக்கு; இன்பம் பெருக்கும் பொருள் நூல்; கடல்களை, காடுகளை மலைகளைக் கடந்து உலகந் தழீஇ நிற்கும் ஒருமறை.

அறிவு நெறி

வாழ்க்கை யென்பது கட்டி முடிக்கப் பெற்ற மாளிகை யன்று. அல்லது அதிட்ட தேவதையோ, ஆண்டவனோ மட்டும் கட்டி முடிப்பதும் அன்று. நமது வாழ்க்கை செம்மையுற அமையத் திட்டம் தீட்டும் பொறுப்பும் நம்முடையதே. நிறைவேற்றும் பொறுப்பும் நம்முடையதே. வயிற்றுக்குச் சோறு யாரும் இடலாம். ஆனால், நம்முடைய மன உணர்வின் உடன்பாடும் உறுதியுமில்லாமல் நம்மை யாரும் வளர்த்துவிட முடியாது. நமது வளர்ச்சி முன்னேற்றத்தின் மையம் நாமேயாம். இந்த இயற்கை நியதியை

உணராதார் ஏராளம்! இங்ஙனம் கூறுவதால் இறைவன் பங்கு என்ன என்ற கேள்வி பிறக்கலாம். இறைவன் நமது வாழ்க்கையின் ஆசிரியன்; தலைவன். அதிலொன்றும் மறுப்பில்லை. ஆசிரியர் கற்றுத்தான் தரமுடியுமேயன்றித் தேர்வு எழுதித் தருவாரோ? தலைவன் வழிநடத்துவானேயன்றித் துரக்கிச் சுமந்து போவானோ? அப்படியே தூக்கிச் சுமந்தால் உயிர் சவலையாய்ப் போகாதோ? மாணிக்கவாசகரும் "சவலையாய்ப் போனால் சிரியாரோ?” என்று பேசுகின்றார். ஆதலால் திருவள்ளுவர் திருக்குறள் செய்ததின் தலையாய நோக்கம் ஒவ்வொருவருக்கும் அவர்தம் வாழ்க்கை மாளிகையைக் கட்டி முடிக்கக் கற்றுக் கொடுப்ப்தேயாம். மாளிகை என்பது ஒரு கல்லால் கட்டப் பெறுவதா? ஒரு பொருளால் கட்டப்பெறுவதா? இல்லை, ஒருவரால்தான் கட்டப் பெறுவதா? பல நூறு கோடி செங்கற்கள் மாளிகை கட்டத் தேவை. அதுபோல, வாழ்க்கையென்ற மாளிகையைக் கட்ட, பலப்பல நற்சிந்தனைகளும் குணங்களும் தேவை.