பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அடுக்கப்பெறும் கற்களுக்கிடையே இசைவும் உறுதியும் தேவை. இதனைத் தருவது கலவைச் சாந்து, அதுபோல, நற்சிந்தனைகளை, நற்குணங்களை வாழ்க்கையோடு இசைவித்து உறுதிப்படுத்தச் செயலும் அனுபவமும் தேவை. ஒரு மாளிகை கட்டி முடிக்கப் பலர் உதவி தேவை என்பது போல ஒரு வாழ்க்கையென்னும் மாளிகையைக் கட்டி முடிக்க நல்ல இனச் சேர்க்கையும், நட்பும் தேவை. திருவள்ளுவர் இவ்வளவையும் தம்முடைய அருமை நூல் மூலம் வழங்குகின்றார். வாழ்க்கையின் அடித்தளமும், மூல முதலும் அறிவேயாகும். அறிவு, மனிதனின் மிகப் பெரிய சொத்து. அதனால் திருவள்ளுவர், 'அறிவுடையார் எல்லாம் உடையார்' என்று ஐயத்திற்கிடமின்றிக் கூறுகின்றார். இங்ஙணம் தெளிவாகக் கூறியதோடு மட்டுமன்றி எதிர் முகத்தானும் மற்று 'என்னுடையரேனும் இலர்' என்று கூறி, அந்நிலையை உறுதிப்படுத்துகின்றார். திருவள்ளுவர் கல்வி வேறு, அறிவு வேறு என்று உணர்த்துகின்றார். இன்று நம்மிடையில் கற்றவர்கள் ஏராளம்! கற்ற மூடர்களும் ஏராளம்: கல்வி, அறிவு பெறுதற்குரிய சாதனமே யொழிய அதுவே அறிவன்று. கல்வியால், கேள்வியால், சிந்தனையால் அறிவு வளர வேண்டும். அதனால், கல்வி, கேள்வி என்ற அதிகாரங்களைப் போலவே அறிவுடைமை என்று தனித்து ஒரு அதிகாரமும் வைத்தார். அறிவு, வாழ்வதற்காக மட்டுமன்று. எல்லாருந்தான் வாழ்ந்து விடுகிறார்கள். நாயும் நரியும் வாழ வில்லையா? காக்கையும் கழுகும் வாழவில்லையா? அது போல மனித வடிவத்தில் விலங்கினும் கேவலமாக வாழ்பவர்கள் பலர் உண்டு. அதை வாழ்க்கையென்று சொல்வதை விட வயிறு வளர்ப்பு என்றே சொல்லலாம். வாழ்க்கை நெடிய உயர்ந்த இலட்சியம் உடையது. அதில் இந்த உலகியலும் ஒரு பகுதி உண்ணலும், உடுத்தலும், உறவினை நாடுதலும் வாழ்க்கையின் மிகச் சிறிய ஒரு பகுதியேயாம். அதுவும் வாழ்க்கையின் நெடிய பயணம் சுமையாகத்