பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சுமத்தாதே! பழி உன்னிடத்திலேயாம்!” என்று இடித்துச் சுட்டிக் காட்டுகிறார்.

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை யின்மை பழி

என்பது குறள்.

தெய்வமே நம்முடைய காரியத்தைச் சாதித்துக் கொடுக்கத் தவறிவிட்டாலும், அல்லது தெய்வத்தால் முடியாது போனாலும் நாம் முயன்றால் முடிக்க முடியும் என்பது வள்ளுவத்தின் முடிபு. இன்று நமக்கெங்கே அந்தக் கருத்து? நம்மில் பலர் முடிச்சுப் போடுவதில் இருக்கிறார்களே தவிர, முடிப்பதிலா இருக்கிறார்கள்? ஊழ் உள்ள தொன்றேயாம். அதிலொன்றும் பொய்யில்லை. ஆனாலும், அது நம்மிடத்தில் இன்றைக்கு வகிக்கின்ற பதவியிருக்கிறதே அதுதான் ஆபத்து. ஊழ் நம்முடைய ஆண்டானன்று; மாற்ற முடியாததுமன்று. மேலும், மாற்றக் கூடியது மட்டுமின்றி, மிகச் சுலபமாக மாற்றக்கூடியதாகும். புறக்கருவிகள் தேவையில்லாமலே மாற்றலாம். வேண்டியது சிந்திக்கும் திறன்; தெளிவான புத்தி, சபலமற்ற உள்ளம், உடம்பை வருத்தி உழைப்பதற்கேற்ற மனப்பக்குவம். இவையிருந்தால் ஊழை ஒடஒட விரட்டலாம். வாழ்வாங்கு வாழலாம். மனிதனின் மனப்போக்கை நிர்ணயம் செய்து திசை திருப்பிவிடுவது சுவை நுகர்வுப் புலன்களேயாம். இன்று பலர் சோற்றுச் சுவையன்றி வேற்றுச் சுவையறியார். துரங்கித் துரங்கிக் கழிக்கும் மடியின் சுவையின்றி மாற்றுச் சுவையறியார். உடல் வியர்வை சிந்துவதில்லை. அதன் பயன், பின்னே இரத்தம் கக்குகிறது. இன்பம் விழையாது இடும்பை இயல்பென்று எண்ணி முயல்பவனே உலகத்தின் தனியுடைமையாகிறான். மண்ணொடு தொடர்பு கொள்ளாத வித்து முளைக்குமோ? நீரொடும் நெருப்போடும் தொடர்பு கொள்ளாத பொருள் வேகுமோ? உடலொடு சாராத உணவு வலிமை தருமோ?