பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


யாருக்கும் பொருள் என்றவுடன் “சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்” என்ற திருவாசக அடிகள் நினைவுக்கு வருவதில்லை. “பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனும்” என்ற செந்தமிழ்க் குமரகுருபரர் கூறிய பொருளும் யாருக்கும் நினைவு வருவதில்லை. பொருள் என்றால் நுகர்ந்து அனுபவிக்கக் கூடிய பொருள்களின் நினைவும் யாருக்கும் வருவதில்லை. “யாஅம் இரப்பவை பொன்னும் பொருளும் போகமுமல்ல” என்ற பரிபாடல் அடிகளை எண்ணுங்கள். இந்தப் பொருளுணர்வையெல்லாம் ஆழப்போட்டுப் புதைத்து விட்டு அந்தக் கல்லறையில் இயல்பிலே மதிப்பில்லாத - செயற்கை மதிப்பைப் பெற்ற காகித நோட்டுக் கற்றைகள் ஆட்சி செய்கின்றன. இந்த இழிதகைமையால் இன்று நம்முடைய நாடு வறுமையடைந்திருக்கிறது. திருவள்ளுவர் பொருளியல் துறையில் மிகச் சிறந்த கருத்துக்களைக் கூறினார். இன்று வளர்த்து வந்துள்ள பொருளியல் தத்துவங்களோடு ஈடு கொடுத்து நிற்கக் கூடிய பொருளியல் சித்தாந்தங்களைத் திருக்குறள் பேசுகிறது. பொருள் என்றால் உயிர் வாழ்க்கையின் உலகியல் பயணத்திற்குத் துணைநிற்கும் பருவுடலுக்கு, ஆற்றல் தரத்தக்க எரிபொருள்களாகிய உணவுப் பொருள்களேயாம். அருளியல் உலகில் உயிர் உணர்வுக்கு ஆற்றல் தரத்தக்க இறைவனே பொருள். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய உயிர் வாழ்விற்குத் தேவையான உண்பொருள்களைத் தானே முயன்று உற்பத்தி செய்து கொள்ளவேண்டும். இதுவே நாணயமான - சுதந்திரமான வாழ்க்கை. அப்படி முடியாதவர்கள் இவற்றை உற்பத்தி செய்யக்கூடியவர்களின் நல்வாழ்வுக்குரியனவற்றையாவது செய்து, அதை ஈடுகட்டக் கடமைப் பட்டிருக்கிறார்கள். இதையேதான் அண்ணல் காந்தியடிகள் “சுய தேவை பூர்த்தி” என்றார். இப்பொழுதும் பலருக்குத் தேவை பூர்த்தியாகிறது. ஆனால் எப்படிப் பூர்த்தியாக வேண்டுமோ அப்படியன்று. உறிஞ்சுதல்,