பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை விளக்கு

133


சுரண்டுதல், முதலிய வழிகளின் மூலம் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளுகிறார்கள். பொருள், உற்பத்தி செய்யக் கூடியதே தவிர, “பண்ண”க் கூடியதன்று. பொருள் சேர்ந்தால் மட்டும் போதாது. சேரக்கூடிய வகையில் சேரவேண்டும். இதனைப் பழியஞ்சிப் பொருளீட்ட வேண்டுமென்கிறது குறள். பொருள்களையும் பலரும் ஒரேவகையில் திரட்ட முயன்றால் அப்பொழுதும் பொருட் பற்றாக்குறை ஏற்படும். பொருள் வருதற்குரிய வழிகளும் விரிந்தனவாகவும், பரந்தனவாகவும் இருக்க வேண்டும். அடுத்த வீட்டு மனிதன் எந்தத் தொழில் செய்து பணம் திரட்டுகிறானோ, அதே தொழிலில் அவனுக்குப் பங்காளியாகி அவன் தொழிலைக் கெடுக்கக் கூடாது. பொருள் வருதற்குரிய புதுப்புது வழிகளைக் காணுதல் வேண்டும். பொருளை ஈட்டவேண்டும். ஈட்டினால் மட்டும் போதாது. பொருட் செல்வத்தைப் போற்றி வளர்க்கவேண்டும். ‘பொருட்செல்வம் போற்றுவார்கண் உண்டு’ என்பது குறள், இங்குப் போற்றுதல் என்பது மற்றவர்களுக்கு வழங்காமலும் துய்க்காமலும் காப்பது என்று பொருளன்று. இவறிக் கூட்டிச் சேர்ப்பது காப்பதாகாது. ஒரு பொருள் தன்னுடைய துய்த்தலுக்கும் வழங்குதலுக்கும் கூட ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை அடையவேண்டும். அந்தப் பொருள் வற்றாது வளந்தரக்கூடிய இயல்பை அடைய வேண்டும். அப்பொழுதுதான் இயற்கை இன்னல்கள் விளைந்துழியும் இடர்ப்பாடின்றி வாழமுடியும். பொருள் வர வர, அது வளமான முதலாக வளம்பெற வொட்டாமல் சில்லறையாகவே அழித்தால் பொருள் அழியும் என்பது ஒரு சிறந்த பொருளியல் கருத்து. அடுத்து, பொருளாதாரத் தத்துவத்தில் பொருள் விநியோகம் மிகவும் முக்கியமானதாகும். இன்று நம்முடைய நாட்டில் இந்த விநியோகம் சீராக இல்லை என்பது பலருடைய கருத்து. தனிமனிதன் அளவிலும் சரி சமுதாய அளவிலும் சரி, திட்டமிடப் பெற்ற - ஒழுங்குபடுத்தப்பெற்ற பொருட்பங்கீடு வேண்டும். ஒரு மனிதன்