பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை விளக்கு

135


நடமாடுவதன்று. அன்பு காட்டி வாழும் பண்பில்தான் அவனது உயிர்நிலை இருக்கிறது. இதனை,

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு

என்று குறள் பேசுகிறது.

உலகத்தில் தனிமனிதனுக் காயினும் சரி, சமுதாயத்திற்காயினும் சரி வளம்பல பெற்று இனிதே வாழ அன்பே அடிப்படை மனித உலகத்தைப் பகையிலிருந்து விலக்கிப் பண்பு தழீஇய சமுதாயமாக மாற்றுகிற சக்தி அன்புக்கே உண்டு. ஏன்? மண்ணுக்கும் விண்ணுக்கும் இணைப்பூட்டும் ஆற்றல் அன்புக்கு உண்டு. அன்பு மனிதனை விலங்கியல் தன்மையிலிருந்து விடுதலை செய்கிறது. முழு மனிதனாக்குகிறது; தெய்வமாக்குகிறது. திருவள்ளுவர் காட்டும் அன்பு அறத்திற்கு மட்டும் சார்புடையதன்று; மறத்திற்கும் துணையாகும். வள்ளுவம் காட்டும் அன்பு நெறி இன்றைய உலகத்திற்கு மிகவும் அவசியமான தேவை. இந்த அன்பு நெறி தழைப்பதாக

ஒழுக்க நெறி

யாரொருவருக்கும் இடையூறு இன்றி வாழும் நெறியே ஒழுக்க நெறியாகும். இதனையே திருக்குறள் ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல்’ என்று கூறுகிறது. விலங்கிலிருந்து மனிதர்களைப் பிரித்து உயர்த்திக் காட்டுவது ஒழுக்கச் சார்பேயாகும். ஒழுக்கம் உள்ளத்தினைச் சார்ந்து அவ்வழி உடற் சார்பிலும் மேம்பட்டு விளக்கம் காட்டுவது. கைகளால் திருடாமல் மட்டும் இருந்தால் போதாது. ஊர்காவல் படையின்கண் உள்ள அச்சத்தினால், கையால் திருடாமலிருக்கலாம். ஆனால், உண்மையான ஒழுக்கம் என்பது எது என்பதனை, ‘உள்ளத்தால் உள்ளலும் திதே’ என்று குறள் கூறுகிறது. ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய