பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உரிமைகளுக்கும் இன்பத்திற்கும் மட்டும் பாதுகாப்பாளனாக இருக்கக் கூடாது. தன்னுரிமையில் நாட்டம் காட்டுவது விலங்கினங்களிடத்திலும் உண்டு. ஒவ்வொரு மனிதனும் மற்றவர்களுடைய உரிமைக்கும் நலனுக்கும் இன்பத்திற்கும் பாதுகாப்பாளனாகவும், உத்தரவாதம் தருபவனாகவும் இருக்க வேண்டும். இன்று ஏது அந்த நிலைமை? பாதுகாப்பாளனாக இருக்க முடியாது போனாலும் உபத்திரவம் தராமல் இருந்தால் போதுமானது என்று கருத வேண்டிய திருக்கிறது. இதனை,

ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்

என்று கூறுகிறது திருக்குறள். இன்று இலக்கியம் சமயம் சட்டம் இத்தனைக்கும் ‘பேப்பே’ சொல்லிவிட்டுத் தப்பித்துக் கொண்டு சாமர்த்தியமாக வாழ்வதைத் தானே விரும்புகிறோம். இந்த நிலைமாறி, தற்சார்பான ஒழுக்க இயல்புகளுடன் சமுதாயத்தைச் சார்ந்த பொது ஒழுக்க நெறியினோடும் நாளும் வளர்ந்து விளங்குவதாக.

ஒருமை நெறி

உலகம் ஒன்று. உலகிடை வாழும் மனித குலமும் ஒன்று. உலகு தழுவிய உறவு நெறியைக் கண்ட பெருமை தமிழுக்கு உண்டு. “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்பது புறநானூறு. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பது திருமந்திரம். மனிதகுல ஒருமைப் பாட்டு நெறியை, ஆன்ம நேய ஒருமைப்பாடு என்று கூறுவர் இராமலிங்க அடிகள். இன்பத்தமிழின் இணையற்ற இலட்சியம் மனிதகுல ஒருமைப்பாடு. ஆனால் அந்த மொழி பேசும் மக்களிடத்திலேயும் கூட இன ஒருமைப்பாடு இல்லாமல் பல்வேறு சாதிகளாகப் பிரிந்து ஆதிக்க வர்க்கத்தின் கீழ் அடிமைப்படுகிறார்கள். இந்திய நாட்டின் பாதுகாப்பு இந்திய ஒருமைப்பாட்டிலேதான் தங்கியிருக்கிற்து. இந்திய நாட்டின்