பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



கல்வி, தொடர்ந்து பயிலத்தக்க ஒன்று. அதற்குக் கால எல்லை கிடையாது. இப்பொழுதோ பலர் படித்து முடித்து விட்டதாகவே கூறுகிறார்கள். மனிதன் சாகிற வரையில் கற்கவேண்டும். இந்த அடிப்படையில்தான் "சாந்துணையும் கற்கவேண்டும்" என்று வள்ளுவம் ஆணையிடுகிறது. இன்று நம்முடைய தமிழக அரசு கல்வியில் போதிய ஆர்வம் காட்டுவது பாராட்டத்தக்கதேயாகும். ஆனாலும் கல்வியின் தரம் உயர-மக்கள் மன்றத்தில் அறிவு வீச்சு ஏற்பட-மேலும் பல பணிகளைச் செய்ய வேண்டும். இன்றைய ஆரம்பக் கல்வி, அறிவுக்கிளர்ச்சி செய்யத் தக்கதாக இல்லை என்பது பெரிய உண்மை. ஆரம்ப ஆசிரியர்களை மிகக் குறைந்த தரமுடையவர்களாகப் பார்த்து எடுக்கிறோம். சிந்திக்கும் திறன் பெற்ற வயது வந்தவர்களுக்குச் சிறந்த ஆசிரியர் களையும், சிந்திக்கும் திறனையே கற்றுத் தரவேண்டிய அறியாப் பருவத்தினருக்குத் தரங்குறைந்த ஆசிரியர்களையும் வழங்கும் முறை நன்றன்று. குழந்தைப் பருவத்தில் வண்ணமும் வடிவமும் பெறாது பசுமையென நிற்கும் உள்ளத்தோடு பழகி, சிந்திக்கக் கற்றுக் கொடுத்து, சிந்திக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி வண்ணமும் வடிவமும் கொடுக்கக் கூடிய கைதேர்ந்த பேராசிரியர்கள் தேவை. அப்பொழுது தான் உறங்கிக் கிடக்கும் அறிவொளி வெளிப்படும்.

கல்விக்கூடங்களுக்கு மிகச்சிறந்த நூலகங்கள் தேவை. நூலகத்திற் பயிலுதலையும், பாடத்திட்டத்தோடு சேர்க்க வேண்டும். எல்லாப் பள்ளிகளிலும் அறிவியல் ஆய்வுக் கூடங்கள் இருக்க வேண்டும். அறிவியல் துறையில் போதிய அறிவைப் பெற ஓயாது உழைக்க வேண்டும்.

எல்லாப் பள்ளிகளும் கல்லூரிகளும் தங்கிப் படிக்கும் வகையினதாகவே அமையவேண்டும். வளமற்றோர் அரசுப் பொறுப்பிலும், வளமுடையோர் சொந்தப் பொறுப்பிலும்