பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வரலாற்றை மாற்ற முடியும். பொதுவாகக் கல்வியில் இன்று சுவைத்திறன் ஊட்டம் தரக்கூடிய சக்தி நம்முடைய கல்வி உலகுக்கு இன்னும் வரவில்லை என்பது என்னவோ உண்மை. கல்வி, சுவையுடையதாக மாறி, அறிவு ஆக்கத்தினைத் தந்து நம்மைப் பிடித்துள்ள மூடப்பழக்க வழக்கங்களும் துன்பமும் தொலைந்து, வலிவும் எழுச்சியும், ஏற்றமும், ஆள்வினையும், ஆக்கமும், அன்பும், அறனும் நிறைந்த சிறந்ததொரு வாழ்க்கை உருவாக வேண்டும். இதைச் சாதிக்க முடியுமா என்பது இன்றைய கல்வி உலகத்திற்கு ஒர் அறைகூவல்.

திருக்குறள் ஒழுக்கம்

தமிழின் சிறப்பு

தமிழ் காலத்தால் மூத்தது; கருத்தாலும் மூத்தது. தமிழ் வாழ்க்கையோடு இயைந்து வளர்ந்த மொழி, வாழக்கையை வளர்த்த மொழி. தமிழினம் உலகின் வரலாற்றுக் காலந்தொட்டே சீருடனும் சிறப்புடனும் வாழ்ந்து வந்திருக்கிறது. தமிழினத்தின் கருத்துக்கள் நம்பிக்கை, நல்வாழ்க்கை இவை களுக்கு இயைபுற அமைந்தன. வரட்சித் தன்மையுடைய கற்பனைகளோ, இசைவான நடைமுறைகளுக்கு அப்பாற் பட்டவைகளோ, தன்னிச்சையான மனப்போக்குகளின் படைப்புக்களோ தமிழில் இல்லை.

தமிழ், மொழியாக மட்டும் வளரவில்லை. நாகரிகம், பண்பாடு, சமயம் ஆகியவற்றையும் தழுவி வளர்ந்திருக்கிறது. தமிழ், வாழ்க்கையை ஏனோ தானோவென்று கணிக்க வில்லை. வாழ்க்கையை வாழ்க்கையாகவே பார்க்கிறது. ஏன்? "வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல்” தமிழ்தந்த பாடம். இன்றா? நேற்றா? இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயாம். உலகமொழி என்று பாராட்டப்படுகின்ற ஆங்கிலத்திலும், அம்மொழி பேசும் மக்களின் வாழ்க்கைக்கு இலக்கணமில்லை. இந்திய நாட்டின் இணைப்பு மொழியாகச்