பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இந்த முறைவைப்பின் பல்வேறு படிகளில் உள்ள பாத்திரங்களை முறைப்படி வளர்த்து, ஒன்றுக்கும் பிறிதொன் றுக்கும் இடையில் தொய்வில்லாமல், ஒன்று பிறிதொன்றின் நலனுக்கு இடையூறு இல்லாமல் வளர்த்து, வழி நடத்தும் பெருமை திருக்குறளுக்கே உரியது. திருக்குறள் தனிமனிதனை நம்புகிறது; முற்றிலும் முழுவதும் நம்புகிறது. அவனே மனித சமுதாயத்தை வரலாற்றை இடையீடின்றி எழுதும் பாத்திரம் என்றும் நம்புகிறது. அவனை அகத்தாலும் புறத்தாலும் வளர்த்து உறுதிப்படுத்த-நிலைநிறுத்த திருவள்ளுவர் முயற்சிக்கின்றார்.

சிற்பிக்குச் சிலை வடிப்பதே நோக்கம். உழவனுக்குக் காடுகளைக் கழனியாக்குவதே நோக்கம். திருவள்ளுவருக்கு மனிதனை, மனித சமுதாயத்தை வளர்ப்பதே நோக்கம். திருக்குறளில் இலக்கிய இன்பம் உண்டு; கவிதை நலமுண்டு; எதுகை மோனைகள் ஏராளம்; அணியின்பங்கள் ஆயிரமாயிரம். எனினும் இவையனைத்தும் மனிதனை முழுமைப்படுத்துகின்ற குறிக்கோளுக்குத் துணையே தவிர அவையே மேம்பட்டு விளங்கவில்லை. மனிதனை வளர்க்கும் நோக்கமே திருக்குறளில் நிறைவுற்று வெளிப்பட்டுக் காட்சி அளிக்கிறது. தனிமனிதனைத் தன்நிலைஒழுக்கத்தில் ஈடுபடுத்தி, வளர்த்து, துணையுடன் கூட்டி, அவ்வழி உலகுடன் இணைத்து, அவ்வழி இறை யின்பத்துடன் இணைத்துப் புகழ் உண்டாக்குகிறது.

உயிர்க்குறுதி

தமிழ்மரபு, உயிர் உண்மையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. இன்று வரையில் பிறமொழி இலக்கியங்கள் உயிரைப் பற்றித் தெளிவாக விளக்க முடியாமல் அல்லற்படுகின்றன. திருக்குறள் உயிர் உண்மையை ஒத்துக் கொள்கிறது. உயிர், தோற்றமும், அழிவும் இல்லாத நிலை யான ஒன்று என்பது திருக்குறள் முடிபு. இதனை "மன்உயிர்”