பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை விளக்கு

147


என்னும் சொல்லாட்சியால் உணரலாம். இதனை மேலும் அரண் செய்ய எழுபிறப்பு உண்மை துணை செய்கிறது. அது துன்பத் தொடக்கிலிருந்து விடுதலைபெற்று நல்லின்ப வாழ்க்கை பெறுதற்குரியதென்று காட்டுகிறது. உயிர் அறிவுப் பொருள் என்றும் நம்புகிறது. ஆனால் அது இயல்பான அறிவன்று. உயிர், அறிவு பெற்று விளங்குவதற்குரிய பொருள். அறிவே உயிர்க்கு முதல்துணை என்பது திருக்குறள் முடிபு. அதனால் "அறிவுடையார் எல்லாம் உடையார்” என்று பேசுகிறது. இந்த அறிவினைப் பெறுதற்குரிய வழிவகைகளையும் ஐயத்திற் கிடமின்றி அறிவுறுத்தலோடு ஆணையாகவும் கூறுகிறது.

          கற்க கசடறக் கற்பவை கற்றபின்
          நிற்க அதற்குத் தக

என்பது குறள். இத் திருக்குறள் திறனாய்வுக்குரிய நிறைந்த செய்திகளைக் கொண்டது. உடல் நலமில்லார் மருத்துவரிடம் காட்டுவர். மருத்துவர் உடலினைச் சோதனை செய்து உடலில் நலம் விளைவித்தற்குரிய இன்னின்ன உயிர்ச் சத்துக்கள் இல்லை என்று எடுத்துக் கூறுவர். நலம்பெற விரும்புவோர் தம் உடலில் இல்லாத உயிர்ச் சத்துக்களைப் பெறுதற்குரிய உணவுப் பொருள்களையும் மருந்துகளையும் தேடி உண்பர் நலம் பெறும்வரை உண்பர். அதுபோல ஒவ்வொருவருக்கும் இயல்பாகவே சில உயிர்க்குறைகள் குணக்குறைகள்) உண்டு. இந்த உயிர்க்குறைகளை இன்னவை எனத் தெளிந்து அக்குறைகளை நீக்கி நலந்தரக்கூடிய நல்ல நூல்களைக் கற்கவேண்டும். அக்குற்றங்கள் நீங்கி நலம் பெறும்வரை கற்க வேண்டும். இக்கருத்தினைக் 'கசடறக் கற்பவை” என்ற சொற்களின் மூலம் விளக்குகின்றார்.

மனிதன் புறத்துறுப்பால் காணப்படுபவன் மட்டு மல்லன். புறத்துறுப்பால் மட்டும் மக்கள்போல் தோற்றம் அளிப்பவர்களை மக்களே போல்வர் என்று கிண்டலும்