பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை விளக்கு

153


அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை என்பது.

பொறையுடைமைக்கு எடுத்துக் காட்டும் உவமை எண்ணி எண்ணி இன்புறத்தக்கது. மலையையும் உடைத்துக் கல் எடுக்கிறோம். அது பொறுமையாகவே இருக்கிறது. அணைகளும் மாளிகைகளும் கட்டக் கற்களைத் தருகின்றது. நன்னூல் ஆசிரியர் போன்றவர்கள் நிலை தளராத ஆசிரியப் பெருமக்களுக்கு மலையை உவமையாகக் கூறுவர். ஆனால் திருவள்ளுவர் பொறுத்தாற்றும் பண்பிற்கு நிலத்தை எடுத்துக் காட்டாகக் கூறுவானேன்? மலை, உடைப்போரைப் பெரும் பாலும் எதிர்த்துத் தாக்குவதில்லை. ஒரோவழி எதிர்த்துத் தாக்குதலும் உண்டு. அது மட்டுமன்று: அது உடைக்க உடைக்க அழிந்து போகிறது. அதனாலேயே மலையை ஒதுக்குகிறார் திருவள்ளுவர். நிலம், உழுவோர் தரும் துன்பத்தைத் தன் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டு வளர்கிறது. நிலம் உழ உழ வளம் பெறும். பயன் பெருக்கித்தரும். உழுவோருக்கே தரும். பயன்படும் வகையால் தன் மதிப்பினை உயர்த்திக் கொள்ளும். ஆதலால் உழுபவன் நிலத்தினுடன் உரிமையும் உறவும் கொள்கிறான். அது போலவே பகைவர்கள் துன்பங்கள் தருவார்களானால் அத்துன்பங்களை உரமாக்கிக் கொண்டு வளர்தல் வேண்டும். அப்படி வளர்ந்தால் துன்புறுத்தியவர்களும் உறவும் உரிமையும் கொண்டாடுவர், என்ற மிகச் சிறந்த கருத்து எண்ணி எண்ணி இன்புறத்தக்கது.

இறைநிலை

திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கை உடையவர். திருக்குறள் கடவுள் வாழ்த்துப் பாடுகிறது. ஆயினும் திருவள்ளுவர், நம்பிக்கைக்கும் நல் வாழ்க்கைக்கும் இசைவில்லாத வெற்றுச் சடங்குகளைச் சார்ந்த சமய நெறிகளில் நம்பிக்கை இல்லாதவர். தூய தெளிவான வாழ்க்கை யோடியைந்த மெய்ந்நெறியில் நம்பிக்கையுடையவர்.