பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கடவுளின் பெயரும் இல்லை. எந்தச் சமயச் சின்னங்களும் இல்லை. ஆதலால் திருக்குறள் இனச் சார்பற்ற நூலாக, நாடும் எல்லையும் கடந்த நூலாக, மனிதகுலத்தின் பொது நெறி நூலாகத் திகழ்கிறது.

இன்றைய தேவை “மனிதகுல ஒருமைப்பாடு.” இதனைச் சமயச் சான்றோர் “ஆன்ம நேய ஒருமைப்பாடு” என்று கூறுவர். இத்தகு ஒருமைப்பாட்டைக் காணுதலும் வளர்த்தலும் அருமையான முயற்சி; ஆயினும் இன்பம் பயக்கும். ஆனால் உண்மையான ஒருமைப்பாட்டைக் காணல் வேண்டும். ஒற்றுமையே ஒருமைப்பாடென மயங்கிவிடுதல் கூடாது. ஒற்றுமை கட்டாயம், தேவை ஆகியவை கருதியும் தோன்றலாம். கலகம் செய்வதற்குச் சக்தியின்மையின் காரணமாகவும் ஒற்றுமை இருக்கலாம். இது நெடிய பயனைத் தராது. ஒருமைப்பாடு என்பது சிந்தனையினால், உணர்வினால், குறிக்கோளால், வாழ்க்கை அமைப்பால் ஒன்று கலந்து இருப்பதாகும். இத்தகு ஒருமைப்பாட்டை அரசுகளால் தோற்றுவிக்க முடியாது. அறநெறியினாலேயே முடியும். அதனாலன்றோ கார்லைல் என்ற பேராசிரியர் “மக்களை இணைத்துப் பிணைக்க வலிமை பெற்ற ஒரு தேசீய இலக்கியம் வேண்டும்” என்று குறிப்பிடு கின்றார். இன்றைய உலகத்தை இணைக்க உலகப் பேரிலக்கியமாகத் திகழ்வது திருக்குறளேயாம். பாரதியும் “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று பாடிப் பரவுகின்றார்.

இந்தியப் பேரரசு இந்திய ஒருமைப்பாட்டைப் பெரிதும் விரும்புகிறது. விரும்பி வற்புறுத்துகிறது. இந்திய ஒருமைப்பாட்டை வலிமை பொருந்திய மத்திய ஆட்சியின் அதிகாரத்திலும் இந்தி மொழியாலும் காணமுடியும் என்று நம்புகிறது. இது வெறும் கானல் நீரே. இந்திய நாட்டின் இணையற்ற தேசிய இலக்கியமாகத் திருக்குறளை ஏற்றுக் கொண்டு, இந்தியநாட்டு மக்கள் அனைவரையும் திருக்குறள் சிந்தனையிலும் திருக்குறள் நெறி வாழ்க்கையிலும் ஈடுபடச்