பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைச் செல்வம்

159


அதனாலன்றோ, அன்பின் திருவுருவமாக விளங்கிய கண்ணப்பரை, சேக்கிழார் "கும்பிட்ட பயன்” என்று குறிப்பிடுகின்றார். வாழ்க்கையின் உயர் இன்பமாக விளங்குவதும் அன்பு. அதை அடையும் நெறியாக இருப்பதும் அன்பு. ஆதலால், வையகத்திற்குப் பொருள் அன்பேயாம்! "அன்பலால் பொருளும் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே” என்பார் அப்பரடிகள்.

அன்பு, எளிய சொல்! ஆனால், அரிய வாழ்க்கை. அன்புடையராக இருத்தல் எளிதன்று. விண்ணுலகும்கூட அன்பை நோக்கி ஏங்கித் தவம் செய்கிறது. அன்பு நெறியை வளர்த்து மானிட சாதிக்கு உரிமையாக்க எத்தனையோ சான்றோர்கள் தம்மையே களப்பலியிட்டும்கூட முயன்றனர். அன்பு நெறி முழுமையான வெற்றியை அடையவில்லை. மானிட சாதி அன்பை வளர்த்துப் பேண சமுதாய அமைப்பையும் அப்பணிக்குத் துணையாகச் சமய நெறிகளையும் பணிக்கு இடையூறு ஏற்படின் தக்காங்கு துணை செய்ய அரசியலையும், அன்புணர்வை இடையறாது வளர்க்க இலக்கியங்களையும் தோற்றுவித்தனர்; படைத்தனர். ஆனால் முடிவு என்ன? கறையான் புற்றெடுக்கக் கருநாகம் குடிபுகுந்தது போல இந்தப் புனிதமான அன்பு நெறியின் வாயில்களே துன்பியல்களை விளைவித்திருக்கின்றன.

சமயச் சண்டைகள், நாட்டுச் சண்டைகள், மொழிச் சண்டைகள்! உலகத்தில் கானல்நீரைக் கங்கை நீரெனக் கூறுவது போலக் கூறினர். எந்தவொரு பற்றும் வரையறைகளைக் கடத்தல் கூடாது. மனித உலகம் என்ற பொதுமைக்குத் தடையாகப் பற்றுக்கள் வளர்தல் தீமை! தீவிரப் பற்றாளர்கள் வளர்ப்பது தீமையையே! அன்புடையீர், நினைமின்! மனிதரை மனிதர் வருத்தும் கொடிய கொலைக் கருவிகள் நூற்றாண்டுக்கு நூற்றாண்டு வளர்ந்து வருகின்றனவா? குறைந்து வருகின்றனவா? எட்டிய தூரத்தில் இருக்கும் மனிதனை அடிக்கும் தன்மையினனாக இருந்த மனிதன், எண்ணிப் பார்க்க முடியாத தொலைவிலுள்ள