பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைச் செல்வம்

167


இல்லற வாழ்க்கையின் சிறப்புடைய பயனை நன்மக்கள் வாயிலாகத்தான் உணர முடியும்.

திருக்குறள், தவம் செய்தலை நோக்கமாக உடையது. துறவு நெறியையும் எடுத்துக் கூறுகிறது. திருக்குறளின் துறவு அருமையில் எளிய ஆற்றல் உடையது. துறவொழுக்கத்தின் தலையாய பண்பு, எதனையும் ஏற்றுத் தாங்கிக் கொள்ளல். எந்த உயிர்க்கும் தீங்கு செய்யாமை. அறிந்த மெய்ப்பொருள் வாயிலாக தவத்தின் ஆற்றலறிந்து ஒழுகுதல்.

உயிர், பதிவுகளுக்குரியது. நினைந்து செயல்படும் அனைத்தும் உயிரில் பதிவுகளாகின்றன. இந்தப் பதிவுகள் மீண்டும் வாழ்க்கைப் போக்கில் மேம்பட்டு வருதலையே ஊழ் என்கிறோம். ஊழ், பழக்கங்களின் பதிவு; வழக்கங்களின் சுவடு, உழுத சால் வழிச்செல்லும் எருதினைப்போல் பழக்கங்களின் வழியே செல்லுவது உயிரின் இயல்பு. ஆனால், ஆழமாகச் சிந்தித்துப் பழைய பதிவுகளை அழித்து, புதிய பதிவுகளை உண்டாக்கலாம். இங்ஙனம் செய்யும் வாழ்க்கையையே அறிவறிந்த ஆள்வினையுடைய வாழ்க்கை என்று குறள் பாராட்டும்.

திருக்குறளின் அரசியல், முறை செய்து காப்பாற்றுவதில் தொடங்கி மெள்ள மெள்ள ஆட்சியாக வளர்கிறது. அரசியல் முழுமையாக வளர்ந்த நிலையில், முறையில் நிறுத்தியும் நிற்காமல் வரம்புகளைக் கடந்து மற்றவர்க்குத் துன்பத்தைத் தரும் அளவுக்குச் செல்லுபவர்களைக் கடிந்து நெறியில் நிறுத்த ஆட்சி உரிமை பெற்றிருக்கிறது.

திருக்குறள், தலைமகளை "வாழ்க்கைத் துணைநலம்" என்று சிறப்பிக்கிறது. குடும்பத்தின் அகத்திணை வாழ்வியலுக்குத் தலைமகள் தலைவியாகவும், புறத்திணை வாழ்வியலுக்குத் தலைமகன் தலைவனாகவும் திருக்குறள் அமைத்துக் காட்டுகிறது. ஆயினும் இல்லத்தின் பொருளாட்சி பெண்ணிடத்திலேயாம். குடும்ப அமைப்பில் சுற்றத்தாரைப்