பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைச் செல்வம்

169


கொச்சைப்படுத்தும் நெறிகள் தோன்றிப் பரவின. அக்கருத்தைத் திருக்குறள் மறுக்க வேண்டிய காலக் கட்டாயம் இருந்தது.

அதனால் நிலமிசை-நிலத்தின் கண் நெடுநாள் வாழச் சொல்கிறார்; வாழ, வழி காட்டுகிறார்! நிலத்தின்கண் நெடுநாள் வாழ வழி என்ன? கடவுள் நேரிடையாகவே தம்பொறுப்பில் வாழ்விப்பாரா? அல்லது வாழும் உயிர்க்குத் துணையாக நின்று உயிரையே அது செய்யும் முயற்சியினால் வாழச் செய்வாரா?

கடவுள் எப்போதும் நேரிடையாகப் பொறுப்பேற்க மாட்டார். அங்ங்ணம் பொறுப்பேற்று உயிர்வளர்ச்சிக்குத் துணை செய்யாது, கடவுள், காரணங்களாக அமைந்து உதவி செய்வாரே தவிர, காரியங்களாக வந்து உதவி செய்ய மாட்டார். உயிருக்கு அறிவும், கற்றலும் உரிமையாதல் மூலமே உயிர் தற்சார்பு நிலையை எய்தும். அப்படியல்லாது கடவுளே தம் பொறுப்பில் காப்பாற்றினால் மையொற்றுத் தாள் போல வாழும். தற்சார்பைப் பெறாது.

ஆதலால் நிலமிசை நெடுநாள் வாழ, நிறை நலம் மிக்க கடவுள் திருவடிகளை இடைவிடாது நினைத்தல்; அவ்வழி இறைவனின் நலன்களைப் பெறுதல்; நின்றொழுகுதல். இதனை "மாண்டி சேர்தல்” என்றார்.

சேர்தல் பருப்பொருள் வழி நிகழும் சேர்க்கையன்று! உணர்வு வழி நிகழும் சேர்க்கையேயாம்! அதாவது. நினைத்தல், ஒழுகுதல். ஒருவர் ஒன்றை உரிமையாகப் பெற்றிருக்கும் நிலையை ஒழுகலாறே காட்டும்! அன்பைப் பற்றிக் கற்றல் நிலை வேறு! கேட்டல் நிலைவேறு சொல்லும் நிலை வேறு! இம்மூன்றிலும் பெருந்திறன் பெற்றோர்கட்ட அன்புடையராதல் அரிது! அன்புடையராக வாழும் பண்டை, உயிர் உரிமையாக-உடைமையாகப் பெற்ற